
நாகப்பட்டினம்,ஆக.22: அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் வெளிநோயாளிகளுக்கு விரைவான சேவை வழங்க வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளர் சகன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினார். நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி நேற்று நாகப்பட்டினம் வந்தார். நாகப்பட்டினம் நகராட்சி பழந்தெருவில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையத்திற்கு சென்றார். அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து வேளாங்கண்ணி அருகே ஒரத்தூரில் கட்டப்பட்டுள்ள நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட நுண்கிருமி ஆய்வகம், பிரசவ பிரிவு பணியாளர்கள் அறை, பிரசவம் சம்பந்தப்பட்ட ஸ்கேன் சென்டர், புதிதாக பிறந்த குழந்தை ஸ்கேன் சென்டர், சிஆர்டி மையம், பொது ஆய்வகம், பிரசவ அறை, குழந்தைகள் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, டையாலிசிஸ் அறை, ஆப்பரேஷன் தியேட்டர், பொது அறுவை சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, கொரோனா நோய் சிகிச்சைக்கான வெளிபுற நோயாளிகள்(ஓபி) பிரிவு, வைரஸ் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையம், சிடி ஸ்கேன் மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்திலுள்ள வெளி நோயாளிகள் பெயர் பதிவு செய்யும் அறை, மருந்தகம் மற்றும் மருந்துகள் பாதுகாப்பறை, ஆய்வகம், மருத்துவர்களின் அறை ஆகியவற்றை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார். அரசு மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு போதுமான வசதிகள் இருக்கிறதா, சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கிறதா என டாக்டர்கள் மற்றும் மருத்துவகல்லூரி மாணவர்களிடம் அரசு முதன்மை செயலாளர் கேட்டார்.
இதை தொடர்ந்து மருத்துவமனையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளிநோயாளிகள் சிகிச்சை பெற வரும்போது அவர்களது காலம் விரயமாகாமல் விரைவான சேவையை வழங்க வேண்டும் என கூறினார். உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் பெயர் மற்றும் அவர்களது விபரங்கள் பதிவு செய்ய வேண்டும். மருத்துவ அனுமதி சீட்டு வழங்குதல், நோயாளிகளின் தொடர் சிகிச்சை விபரங்கள் போன்றவை சரியாக மேற்கொள்ள வேண்டும். மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு இன்றி நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என கூறினார். அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, தீவிர பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு, ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பு பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய சிகிச்சை பிரிவுகளில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்தும்,
அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் அணுகுமுறை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் குறைகள் ஆகியவற்றை நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவ அலுவலர்களுடன் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி ஆலோசனை நடத்தினார். உடன் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், சார்ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர்லால், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெனிடாகிரிஜீஸ்டியனாரஞ்சனா, இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜோஸ்பின்அமுதா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) விஜயகுமார் மற்றும் பலர் இருந்தனர்.
The post அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு விரைவான சேவை வழங்க வேண்டும்: அரசு முதன்மை செயலாளர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.