×

இந்தியா கூட்டணி வெற்றி பெறும் போது நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும்: திருச்சி சிவா எம்.பி. பேச்சு

 

மேட்டுப்பாளையம்,ஆக.22: கோவையை அடுத்த சிறுமுகை பேரூர் கழக திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் நேற்று சிறுமுகையில் நடைபெற்றது. சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார் வரவேற்றார்.இந்த கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை கழக குழுத் தலைவருமான திருச்சி சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேசியதாவது: தமிழை படித்தவன் உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறான். இஸ்ரோவில் தமிழன், சந்திராயன் உருவாக்கத்தில் தமிழன், கூகுளில் தமிழன் என தமிழன் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்துள்ளான்.

ஒரு காலகட்டத்தில் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே மருத்துவர்கள் என்றிருந்த நிலை நீதி கட்சி ஆட்சியில் தான் மருத்துவ படிப்பிற்கு சமஸ்கிருதம் தேவையில்லை என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு தேவையற்றது. செல்வ வளம் கொழிக்கும் அரபு நாடுகளில் உடல் நலம் பாதிக்கப்படும் செல்வந்தர்கள் கூட தமிழகத்தில் தான் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். நீட் தேர்வு என்பது சதி. இரவு பகலாக படித்து பிளஸ் டூ வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவராக முடியும் என்பதால் தனியார் பயிற்சி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி நீட் பயிற்சி பெற வேண்டிய சூழல்.

தற்போது ஒன்றிய அரசு இந்திய மருத்துவ கழகம் என்பதை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்ற முயற்சிக்கிறது. ஆணையமாக மாற்றப்பட்டால் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே விதி தான்.இந்திய மருத்துவ கழகத்தை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றுவது குறித்த மசோதா ஒப்புதலுக்காக முன் வைக்கப்பட்ட போது மக்களவையில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் ஆணைய மசோதா வந்த போது பிரிவு 14 மற்றும் 15 ஐ நீக்க வேண்டும் என வலியுறுத்தினேன். இதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்த கட்சி அதிமுக. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை.

திணிக்க முடியாது. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக இளைஞரணியை உருவாக்கியவர் கலைஞர். பண்புகளின் உறைவிடம் கலைஞர். எதிர்க்கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் கலைஞர். இந்தியா கூட்டணி வெற்றி பெறும் போது நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவும், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச்செயலாளருமான பா.அருண்குமார்,தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அஷ்ரப் அலி,கூடலூர் நகர மன்றத் தலைவர் அறிவரசு, சிறுமுகை பேரூராட்சித் தலைவர் மாலதி உதயகுமார்,நகர செயலாளர்கள் வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

The post இந்தியா கூட்டணி வெற்றி பெறும் போது நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும்: திருச்சி சிவா எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Trichy Siva ,Mettupalayam ,Coimbatore ,Sirumugai Parur Kazhagam DMK ,North District ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...