×

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக. 22: பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வுகோரி தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர், மதுரை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்துவதற்காக கணினி, உடற்கல்வி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில், 13 ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மாதம் ரூ.10,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, இவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து மாதம், ரூ.28,000 ஊதியம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததை கண்டித்து, பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர், நேற்று மதுரை கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அரசு உத்தரவை செயல்படுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து வரும் ஆக.28, செப்.4 ஆகிய தேதிகளில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் கூறினர். மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் செப்.21ம் தேதி முதல் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

The post பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Part-time Special Teachers' Association ,Madurai Collector's Office ,Dinakaran ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...