×

2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி

தண்டராம்பட்டு, ஆக. 22: தண்டராம்பட்டு, செங்கம் அருகே 2 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ் வணக்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட தேசூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார்(25), டெய்லர். இவருக்கு அருகிலுள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நேற்று காலை வீட்டில் திருமணம் நடைபெறுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, குழந்தை பாதுகாப்பு அலுவலர் பரமசிவம், ஊர் நல அலுவலர் பழனியம்மாள் ஆகியோர் ராம்குமாரின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கல்யாண கோலத்தில் ராம்குமார் மற்றும் சிறுமி இருந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.

மேலும் குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறி சிறுமியை தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் செங்கம் அடுத்த கோட்டங்கல் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான விக்னேஷ்(24) என்பவருக்கு, அவரது வீட்டில் நேற்று காலை தானிப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சமூக நலத்துறை அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தானிப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரேநாளில் 2 சிறுமிகள் திருமணத்தை அதிகாரிகள் விரைந்து சென்று தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : social welfare department ,Thandarampattu ,Sengam ,Thandarampatu ,Dinakaran ,
× RELATED அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த...