நெல்லை, ஆக. 22: நெல்லையில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் கார்த்திகேயன், பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் கார்த்திகேயன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்த மக்களிடம் மனுக்கள் பெற்று கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை, விபத்துமரண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு, மற்றும் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 450க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) கிஷன்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) ஷீஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவகாமசுந்தரி, உதவி ஆணையர் (கலால்) ராமநாதன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவு appeared first on Dinakaran.
