×

வறட்சி நிவாரணம், பயிர் காப்பீட்டுத் தொகை கோரி கலெக்டர் ஆபீசுக்கு திரண்டு வந்த 9 கிராம பஞ்சாயத்து விவசாயிகள் நெல்லையில் பரபரப்பு

நெல்லை, ஆக.22: வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி வன்னிகோனேந்தல் குறுவட்டத்திற்கு உட்பட்ட 9 கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. நெல்லை மாவட்டம், வன்னிகோனேந்தல், தேவர்குளம், மேல இலந்தைகுளம், சுண்டங்குறிச்சி, தடியம்பட்டி, மூவிருந்தாளி, அச்சம்பட்டி, நரிக்குடி, வெள்ளப்பனேரி ஆகிய கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டுவந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வன்னிகோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட எங்கள் 9 கிராம பஞ்சாயத்துகளும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தபோது, மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு இருந்தது. எங்கள் ஊராட்சிகள் எப்போதும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. ஆனால் அப்போது எங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் 2019ம் ஆண்டுக்குப் பிறகு மானூர் ஒன்றியத்துடன் நாங்கள் இணைக்கப்பட்டதால், கடும் வறட்சியான காலங்களிலும் எங்கள் கிராமங்களை வறட்சி பகுதியாக அறிவிக்காமல் விட்டுவிட்டனர். வறட்சி நிவாரணமோ அல்லது பயிர் காப்பீட்டு தொகையோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது 25 வட்டாரங்கள் தமிழக அரசால் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுளளது. இதில் எங்கள் பகுதிகள் இல்லை. எனவே வன்னிகோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 9 பஞ்சாயத்து பகுதிகளையும் வறட்சி பகுதியாக அறிவித்து, வறட்சி நிவாரணமும், பயிர் காப்பீட்டு தொகையும் வழங்க கேட்டுக்கொள்கிறோம். கடந்த சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 9 கிராம பஞ்சாயத்துகளிலும் இதற்கான பிரத்யேக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

The post வறட்சி நிவாரணம், பயிர் காப்பீட்டுத் தொகை கோரி கலெக்டர் ஆபீசுக்கு திரண்டு வந்த 9 கிராம பஞ்சாயத்து விவசாயிகள் நெல்லையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Vannikonendal CD ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...