×

ஜெயிலர் பட வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி; இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சி: சென்னைக்கு திரும்பிய ரஜினி பேட்டி

சென்னை: ஜெயிலர் பட வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி. இமயமலைக்கு சென்று வந்ததில் மகிழ்ச்சி என்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினி தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 9ம் தேதி புதன்கிழமை காலை சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக, இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில், தனது இமயமலை பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 9.30 மணியளவில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு இமயமலை சென்று வந்தது என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தை வெற்றி படமாக்கிய என்னை வாழவைத்த தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கும், வெற்றி படத்தை இயக்கி கொடுத்த இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

தொடர்ந்து, சந்திரயான் நிலவில் இறங்கப் போவது குறித்து கேட்டதற்கு, அது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறினார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கு, அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை என்று கூறி இரு கைகளையும் உயர்த்தி, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு ரஜினி புறப்பட்டுச் சென்றார்.

The post ஜெயிலர் பட வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி; இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சி: சென்னைக்கு திரும்பிய ரஜினி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jailer ,Himalayas ,Rajini ,Chennai ,
× RELATED ‘ஜெய்லர் 2’ உண்டா? தனது பிறந்தநாளில் பதிலளித்த ஜெய்லர் மகன்!