×

கூவம் நதிக்கரை அருகே குடியிருப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை: போலீஸார் குவிப்பு; திருவேற்காட்டில் பரபரப்பு

பூந்தமல்லி: திருவேற்காட்டில், கூவம் நதிக்கரை அருகே குடியிருப்புகளை கணக்கெடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாகவும் அதனை அளவீடு செய்து காலி செய்து அகற்றுவதற்காக நேற்று பூந்தமல்லி தாசில்தார் மாலினி தலைமையில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி துணை தலைவர் ஆனந்தி ரமேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் திருவேற்காடு போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில். ‘‘கூவம் நதிக்கரையை ஒட்டியுள்ள இந்த பகுதி மேடான இடத்தில் உள்ளது. இதற்குமுன் பல தடவை மழை வெள்ளத்தின் போதும் சிறிதுகூட இந்த பகுதி பாதிக்கப்படவில்லை.

திருவேற்காட்டின் பூர்வ குடிகளான நாங்கள் பரம்பரை பரம்பரையாக 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். இந்த ஊரின் பூர்வீக குடிமக்களான எங்களின் இந்த குடியிருப்புகளை அகற்றக்கூடாது என, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளோம். ஆனால் பூந்தமல்லி தாசில்தார் திருவேற்காடு பூர்வீக குடிமக்களுக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்‌. தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் குடியிருப்புகளை அளவீடு செய்வதற்காக வந்துள்ளனர். பல தலைமுறைகளாக தாங்கள் இங்கு வசித்து வரும் நிலையில் இதுவரை எந்தவித வெள்ள பாதிப்புகளால் எங்கள் குடியிருப்புகள் சேதமடையவில்லை.

வெள்ள பாதிப்பின் போது அரசு நலத்திட்ட உதவிகளையும் பெற்றதில்லை. இங்கு உள்ள பூர்வீக குடிமக்களான எங்களின் குடியிருப்புகளை எடுப்பதற்கு அதிகாரிகள் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது தங்களுக்கு தெரியவில்லை.’’ என்று கூறி அதிகாரிகளை மடக்கி சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போதும் அதிகாரிகளை உள்ளே விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 200க்கும் மேற்பட்ட பூர்வீக குடிமக்களின் குடியிருப்புகளை அகற்றினால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர். பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

The post கூவம் நதிக்கரை அருகே குடியிருப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை: போலீஸார் குவிப்பு; திருவேற்காட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kouvam ,Thiruvelukad ,Poonthamalli ,Thiruvedu ,
× RELATED பூந்தமல்லியில் பரபரப்பு இந்து...