×

ராமாபுரத்தில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது: 55 மாத்திரை, பைக் பறிமுதல்

பூந்தமல்லி: போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கலாசாரத்தை தடுக்க, காவல்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக ராமாபுரம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ராமாபுரம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமாக சாலையின் ஓரம் நின்று கொண்டு இருந்த நபரை மடக்கி, பிடித்து விசாரித்தனர். அதில், அவர் நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்(23) என்பதும், அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த உடல் வலி நிவாரண மாத்திரை 55,பைக் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ராமாபுரத்தில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது: 55 மாத்திரை, பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ramapuram ,Poontamalli ,Tamil Nadu ,
× RELATED உடல் உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி