×

பனப்பாக்கம் கிராமத்தில் 10 மாதமாக பூட்டிக்கிடக்கும் நூலகம்: மீண்டும் திறக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பத்துமாதங்களாக பூட்டிக்கிடக்கும் நூலகத்தை மீண்டும் திறக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில் படித்த இளைஞர்கள், மாணவ – மாணவிகள், படித்த முதியவர்கள், விவசாயிகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு திறனை வளர்த்துக்கொள்ள கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகத்தை இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி பொது அறிவை வளர்ப்பதற்கும் மாணவர்கள் பல்வேறு தேர்வுகளுக்கு குறிப்பெடுத்தும் பயன்படுத்தி வந்தனர்.

இதை ஒரு நூலகர் பணியாற்றி பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 10 மாதமாக இந்த நூலகம் பூட்டியே கிடக்கிறது, இதனால் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் கரையானுக்கு இரையாகிறது. இங்குள்ள நாற்காலிகள் உடைந்து போய் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் மாணவர்கள், முதியோர்களும் செய்தித்தாள்கள், நூல்களை படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் பூட்டிக்கிடக்கும் நூலகம் முன்பு சமூக விரோதிகள் சிலர் சூதாட்டம், மதுபானம் அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே செயல்படாத நூலகத்தை மக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பனப்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் கடந்த 10 மாதமாக திறக்கவில்லை. இங்கு பணியாற்றிய நூலகருக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை. எனவே, அவரும் பணியில் இருந்து நின்றுவிட்டார். எனவே புதிதாக நூலகர் ஒருவரை நியமித்து செயல்படாத நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மேலும் நூலகத்தை சுற்றி புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இங்கு சில சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே செயல்படாத நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என கூறினர்.

The post பனப்பாக்கம் கிராமத்தில் 10 மாதமாக பூட்டிக்கிடக்கும் நூலகம்: மீண்டும் திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Banapakkam ,Oothukottai ,Ellapuram Union Panappakkam village ,Periyapalayam… ,Banappakkam village ,
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது