×

கலெக்டர் அலுவலகத்தில் பட்டா வழங்கக்கோரி நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு

திருவள்ளூர்: பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டி கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் நரிக்குறவர் காலனியில் 83 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடியில் வசித்து வந்த நரிக்குறவர்களுக்கு மாற்று இடமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகத்தூரில் இடம் ஒதுக்கப்பட்டு அதில் நரிக்குறவர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்ட நிலையில் வீட்டிற்கு பட்டா மட்டும் வழங்காமல் அவர்களை அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு அதிகத்தூர் நரிக்குறவர் மக்கள் விண்ணப்பித்தனர். அப்போது இந்த இடம் மேய்ச்சக்கால் புறம்போக்கு நிலம் என்பதால் பட்டா வழங்க வாய்ப்பில்லை என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்களில் சிலர் அலுவலகம் வெளியே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் யாரும் வெளியே வர முடியாதபடி கலெக்டர் அலுவலக கேட் மூடப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மீண்டும் பட்டா குறித்து பேச அழைத்துச் சென்றனர். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். இருப்பினும் இதில் திருப்தியடையாத நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது அவரது காரை முற்றுகையிட்டனர்.

அப்போது நரிக்குறவர்கள் மணிமாலையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கழுத்தில் அணிவித்து காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வருகை வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கிளம்பிச் சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

The post கலெக்டர் அலுவலகத்தில் பட்டா வழங்கக்கோரி நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District ,Kadambathur ,Collector ,Office of the Strap ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு