×

வேகாத அரிசி, உப்பு சப்பு இல்லாத புளியோதரை, சுவையற்ற சாம்பார் சாதம் அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீண் குப்பையில் மலைபோல் குவியல் குவியலாக வீச்சு

* கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
* பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம்
* சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு

மதுரை: மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டிற்கு வந்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகள் டன் கணக்கில் வீணடிக்கப்பட்டு மலைபோல் குப்பையாக குவிக்கப்பட்டிருந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. மதுரையில் நேற்று முன்தினம் அதிமுக எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி நடத்தினார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ரயில், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அக்கட்சி தொண்டர்களுக்கு பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டிருந்தனர். தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்திருப்பதாகவும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், காலையில் இட்லி, பொங்கல், வடை, உப்புமா, சட்னி, சாம்பார், மதியம் வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், காய்கறிக் கூட்டு, பொரியல், அப்பளம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக உணவு சமைக்க சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், உணவு பரிமாறுவோர், பாத்திரம் சுத்தம் செய்வோர் என 10 ஆயிரம் பேர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். மாநாடு பகுதியில் மொத்தம் 3 இடங்களில் 300 கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. அமர்ந்து சாப்பிட டேபிள் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொடுப்பதாக சொன்ன மெனு வழங்கப்படவில்லை. சாம்பார் சாதம், புளிசாதம், தயிர் சாதம் மற்றும் கடலைச் சட்னி, கூட்டு மட்டுமே விநியோகிக்கப்பட்டது. இதில் சாம்பார் சாதம் சரியாக வேகவில்லை. புளியோதரை அடி பிடித்து, உப்பு சப்பின்றி இருந்தது உள்ளிட்ட காரணங்களால் மாநாட்டிற்கு வந்தவர்கள் வாயில் வைக்க முடியாமல் தூக்கி குப்பையில் வீசிவிட்டு சென்றனர். இதனால் பல டன் உணவுகள் வீணடிக்கப்பட்டு குப்பையில் கொட்டப்பட்டது.

இதுகுறித்து மாநாட்டு பணியாளர் மதுரையை சேர்ந்த அண்ணாதுரை (58) கூறுகையில், ‘‘விழாவிற்கு வருவோருக்கு உணவு வழங்குவதற்காக, கடந்த வெள்ளிக்கிழமையே 50க்கும் அதிகமாக லாரிகளில் அரிசி மூட்டைகள், உப்பு, புளி உள்ளிட்டவையும், மளிகை பொருட்களும் கொண்டு வரப்பட்டு உணவுக்கூடங்களில் வைக்கப்பட்டன. சனிக்கிழமை மாலை முதல் ஒரு மணி நேரத்துக்கு 2,000 கிலோ வீதம் புளிசாதம் தயார் செய்யும் பணிகள் நடந்தன. தொடர்ந்து இரவு முதல் மாநாட்டிற்கு பந்தல் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் துவங்கி மாநாட்டை பார்க்க வந்த கட்சியினர் வரை பலதரப்பினரும் உணவு கேட்டு, உணவுக்கூடங்களுக்கு சென்று வந்தனர். அப்போதே புளி, சாம்பார், தயிர் என கலவை சாதங்கள் தயாரிப்பு பணிகள் நடந்து வந்தன.

உணவுக்கூடத்தில் இருந்த கட்சியினர், 20ம் தேதி காலை முதல் தான் உணவு வழங்கப்படும் எனக்கூறி திருப்பி அனுப்பினர். இதனால் உணவு கிடைக்காமல் கடும் சிரமப்பட்டோம். அதேநேரம் மாநாடு நடந்த அன்று வழங்கப்பட்ட உணவு பெரும்பாலும் வேகாமல், அரைகுறையாக சாதம் வடிக்கப்பட்டு அவசர கதியில் செய்யப்பட்டிருந்தது. அதனை சாப்பிட முடியாமல், உணவை வாங்கியவர்களில் பெரும்பாலானோர், கீழே கொட்டிச் சென்றனர். அதனால், மூன்று உணவுக்கூடங்களிலும் சேர்த்து கிட்டதட்ட, பல ஆயிரம் கிலோ உணவுகள் வீணடிக்கப்பட்டுள்ளன. இதுதவிர 500 கிலோ வரை வெண்டைக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும், சமைக்காமலேயே வீணடிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

மாநாட்டுக்கு கூட்டத்தை சேர்த்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், வந்தவர்களுக்கு தரமான உணவு வழங்குவதில் முற்றிலும் கோட்டை விட்டுள்ளனர். அடுத்தடுத்து 2 நாட்கள் முகூர்த்த நாட்கள் வருவதை அறிந்து, நல்ல நாளில் மாநாட்டை நடத்த வேண்டும் என, நினைத்த அதிமுகவினர் மாநாட்டுக்கு வருவோரின் பசியாற்ற தரமான உணவை சரியான முறையில் வழங்க நினைக்கவில்லை. அதேபோல், மீதமான உணவை வீணடிக்காமல் பயன்படுத்துவதற்கான வழிகளை ஆராயாததும், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உணவுப்பொருட்கள் கெட்டுபோய் தூர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தன்னை விவசாயிகளின் காவலன் எனக்கூறி கொள்ளும் எடப்பாடி பழனிசாமி நடத்திய மாநாட்டில் உணவு வீணடிக்கப்பட்டுள்ளதை பார்த்தை விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

* கஷ்டப்பட்டு சம்பாதித்தால் வீணடித்திருக்க மாட்டார்கள்….
சமையல் பிரிவுக்கு பாத்திரங்கள் வாடகைக்கு வழங்கிய நிறுவன ஊழியர் செந்தில் கூறும்போது, ‘‘ஏழை எளிய மக்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படுகின்றனர். மிச்சப்பட்டது தெரிந்தால் காப்பகங்களுக்கு கூட இதைக் கொடுத்திருக்கலாம். சுயமாக கஷ்டப்பட்டு சம்பாதித்தவர்கள் வீணடிக்க மாட்டார்கள். வேதனையாக இருக்கிறது. இப்போது பாத்திரங்களை திரும்ப எடுக்க வந்தபோது, இவ்வளவு சாப்பாடு வீணடிக்கப்பட்டிருப்பதை பார்த்து மனசு வலிக்கிறது’’ என்றார்.

* தேங்கிய சாதத்தை அகற்றி வருகிறோம்
ஒப்பந்ததாரர் தரப்பில் கூறும்போது, ‘‘15 லட்சம் பேருக்கு சாம்பார் சாதம், புளியோதரை உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டது. சூடான சாம்பார் சாதம் பரிமாறப்பட்டு, புளியோதரைதான் பெருமளவில் தேங்கி விட்டது. ஒரு சில சட்டியில் அரிசி வேகாமல் இருக்கலாம். முழுமையாக வேகாதது எனச் சொல்ல முடியாது. 150 பேர் பணியமர்த்தப்பட்டு, தேங்கிய சாதம் வீணாகி விட்டதால் இவற்றை அகற்றி வருகிறோம்’’ என்றார்.

* இந்தியாவில் 20 கோடி பேர் பட்டினியால் பரிதவிப்பு
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் உலக பசி குறியீடு பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலானது, 4 முக்கிய அம்சங்கள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. குழந்தை எடை வளர்ச்சி, ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைவு, குழந்தை இறப்பு சதவீதத்தை வைத்து கணக்கிடுகிறது. கடந்தாண்டு உலக பசி குறியீடு அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் 121 நாடுகள் இடம் பெற்றிருந்தன. இதில் இந்தியா படுமோசமான நிலையில் 107வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் (99), வங்கதேசம் (84), நேபாளம் (81), இலங்கை (64) ஆகிய ஆசிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரை 19 சதவீதம் பேர் பட்டினியால் வாடுகின்றனர். அதாவது, சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் பட்டினியால் பரிதவிக்கின்றனர். இந்த சூழலில் இத்தனை டன் உணவுகள் அதிமுக மாநாட்டில் வீணடிக்கப்பட்டிருப்பது பெரும் வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

* சாப்பாடுதான் கிடைக்கலை… சாம்பாரையாவது குடிப்போம்
உணவு மிகவும் மோசமாக இருந்ததால், கடும் வெயிலில் பசியோடு இருந்த அதிமுக தொண்டர்கள், சமையல் கூடத்தில் ஏதாவது இருக்கும் என எண்ணி உள்ளே சென்றனர். அங்கே சட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சாம்பாரையாவது குடிப்போம் என அள்ளிக் குடித்தனர். சிலர் சாம்பாரில் போட்டிருந்த காய்களை எடுத்து சாப்பிடத் தொடங்கியது சங்கடப்படுத்தியது. ஒரு சிலர் சமைப்பதற்காக வைத்திருந்த அரிசி மூட்டைகள், மசாலா பொருட்களை தூக்கிச் சென்றனர்.

* மேலேயிருந்து கொட்டினாங்க பூவா… கீழே நாங்க கொட்டினோம் ‘பூவா’…! அதிமுக தொண்டர்கள் விரக்தி
அதிமுக தொண்டர்கள் கூறியதாவது: அதிமுக மாநாடுக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர். முகூர்த்த நாள் என்பதால் வாடகைக்கு வேன் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சரக்கு வாகனம், மினி லாரி என கிடைத்த வாகனங்களில் கிளம்பிச் சென்றோம். காலை முதல் இரவு வரை 3 வேளைகளும் அறுசுவை உணவு வழங்கப்படுமென முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோர் கூறியிருந்தனர். நாங்களும் அதை நம்பித்தான் மாநாட்டில் பங்கேற்றோம். புளியோதரையும், சாம்பார் சாதமும் சாப்பிடவா பல கிமீ தூரம் பயணப்பட்டு வந்தோம்? அதையாவது ஒழுங்காக போட்டார்களா? சுவையும் இல்லை. உப்பு, உரப்பு, டேஸ்ட் எதுவுமில்லை.

மோசமான கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்துள்ளனர். கிராம கோயில்களில் கூட அன்னதானம் சிறப்பாக இருக்கும். ஆனால், தமிழகத்தின் பெரிய கட்சியான அதிமுக மாநாடுக்கு வந்த தொண்டர்களான எங்களுக்கு நல்ல உணவு கிடைக்காதது வேதனையாக உள்ளது. நூறு கோடி செலவழித்த மாநாட்டில், நல்ல உணவு தருவதற்காக கொஞ்சம் செலவழித்திருக்கலாம். எடப்பாடிக்கு ஹெலிகாப்டரில் இருந்து பூக்களாக கொட்டினாங்க… சந்தோஷப்பட்டோம். கீழே தொண்டர்கள் நாங்கள் உணவை கொட்டினோம். சுவையாக இருந்தால் அனைவருக்கும் கிடைத்திருக்காது. காரணம், தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவும் தயார் செய்யப்படவில்லை’’ என வேதனையுடன் தெரிவித்தனர்.

The post வேகாத அரிசி, உப்பு சப்பு இல்லாத புளியோதரை, சுவையற்ற சாம்பார் சாதம் அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீண் குப்பையில் மலைபோல் குவியல் குவியலாக வீச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Madurai ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...