×

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நவீன மீன் அங்காடி மீனவர்களுக்கு கடைகள் ஒதுக்கும் பணி தீவிரம்: அதிகாரிகள் நடவடிக்கை

 

சென்னை: பட்டினப்பாக்கம் லூப் சாலையில் கட்டப்பட்டு வரும் நவீன மீன் அங்காடியில், மீனவர்களுக்கு கடைகள் ஒதுக்கும் பணியில் மாநகராட்சி ஈடுப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 125வது வார்டுக்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையின் இருபுறங்களிலும் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள இந்த லூப் சாலையை ஆக்கிரமித்து மீன்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைகள் மற்றும் இங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களால், லூப் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது. மேலும், அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளை மாநகராட்சி அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து மெரினா காவல் நிலையம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதபடி கடைகளை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, மீனவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டு இந்த ஆண்டுக்குள் மீனவர்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்தார்.

முதல்வரின் உத்தரவின்படி,சென்னை மாநகராட்சியின் சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும், மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நவீன மீன் அங்காடியில் சுற்றுச்சுவருடன் 366 மீன் அங்காடிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர், கழிவறை வசதிகள், மீன்களை சுத்தம் செய்ய தனியாக 2 பகுதிகள் இந்த அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகே வெளியேற்றும் வகையில் 40 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி 85% முடித்து விட்டது. தற்போது மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நவீன மீன் அங்காடி இன்னும் 3 மாதங்களில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மீன் அங்காடியில் மீனவர்களுக்கு கடை ஒதுக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து நொச்சிக்குப்பம் மீனவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், எந்தெந்த மீனவர்களுக்கு கடை ஒதுக்க வேண்டும் என மீனவர்கள் சங்கம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டு சென்னை மாநகராட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இதனை சரிபார்க்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. விரைவில் முடிவு செய்யப்பட்டு மீனவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட உள்ளது.

The post பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நவீன மீன் அங்காடி மீனவர்களுக்கு கடைகள் ஒதுக்கும் பணி தீவிரம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Pattinpakkam Loop Road ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...