×

ரயில் கழிவறையில் 16 மணி நேரம் பயணம் செய்த வடமாநில வாலிபர்: கதவு உடைத்து மீட்டு போலீசார் விசாரணை

அரக்கோணம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையில் 16 மணி நேரம் பதுங்கி பயணம் செய்த வடமாநில வாலிபரை போலீசார் கதவை உடைத்து மீட்ட சம்பவம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 5.15 மணியளவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் நேற்று சென்னை பெரம்பூர் வந்தபோது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் உள்ள ஒரு கழிவறை நேற்று முன்தினம் சுமார் 10 மணி முதல் திறக்க முடியாதபடி மூடப்பட்டிருப்பதாகவும், உள்ளே மர்ம நபர் யாரோ இருப்பது போன்று தெரிவதாகவும் பயணிகள் டிக்கெட் பரிசோதரிடம் முறையிட்டனர்.

இதுகுறித்து, ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதற்கிடையில், இந்த எக்ஸ்பிரஸ் ரயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 2.06 மணிக்கு வந்தது. அப்போது, தயாராக இருந்த பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து மூடப்பட்டிருந்த கழிவறையை திறக்க முயன்றனர். தட்டிப் பார்த்தனர். ஆனால், உள்ளே இருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை. பின்னர், ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு கழிவறையின் கதவை சுத்தியல் மற்றும் உளி பயன்படுத்தி அடித்து உடைத்து திறந்தனர். பாதுகாப்பு படையினர் கழிவறைக்குள் சென்று அங்கு மறைந்திருந்த 19 வயது மதிக்கத்தக்க வாலிபரை பிடித்து வெளியே அழைத்து வந்தனர். அந்த நபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் போன்று இருந்தார்.

விசாரணையில் அவர் இந்தியில் பேசியுள்ளார். அவரது பெயர் சோகன்தாஸ் என தெரிவித்தார். மேலும், அவர் நேற்று முன்தினம் இரவு முதல் சுமார் 16 மணி நேரத்துக்கும் மேலாக கழிவறையில் உணவு எதுவுமின்றி பதுங்கியிருந்ததால் சரிவர பேச முடியாமல் சோர்வாக காணப்பட்டதால் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, அவர் எதற்காக ரயில் கழிவறையில் பதுங்கி பயணம் செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுவதால் நேற்றிரவு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு போலீசார் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.

The post ரயில் கழிவறையில் 16 மணி நேரம் பயணம் செய்த வடமாநில வாலிபர்: கதவு உடைத்து மீட்டு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : North State ,Arakkonam ,Northern State ,Ernakulam, Kerala ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!