×

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பி.யு.சி படித்த 67 வயது முதியவரின் மனுவையும் பரிசீலிக்க வேண்டும்: மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி கோரிய பி.யு.சி. படித்த நபரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி தேர்வுக் குழுவுக்கு உத்தரவிடக் கோரி பி.யு.சி. முடித்த 67 வயதான சென்னை பெருங்குடியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பி.யு.சி. படிப்பில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் தாவரவியல், விலங்கியல் பாடங்கள் உள்ளடக்கிய நேச்சுரல் சயின்ஸ் படித்துள்ளார். நீட் தேர்வில் 720க்கு 408 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பரிசீலிக்கவில்லை என்றால் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொள்வது குறித்து பரிசீலிக்க கோரி தேர்வுக்குழுவுக்கு மனு அனுப்பியுள்ளார் என்று வாதிட்டார்.

தேர்வுக்குழு தரப்பில், மனுதாரர் பிளஸ் 2 படிக்காத காரணத்தால் அவரை கலந்தாய்வில் அனுமதிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், நீட் தேர்வுக்கான கல்வித்தகுதி என்ன, வயது வரம்பு என்ன எனக் கேள்விகளை எழுப்பினர். அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது உச்ச வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. நீட் தேர்வுக்கான தகுதி விதிகளே, மருத்துவ படிப்புக்கும் பொருந்தும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் சுற்று கலந்தாய்வு முடிந்து விட்ட நிலையில், இரண்டாவது சுற்று கலந்தாய்வுக்கு முன், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று தேர்வுக்குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

The post மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பி.யு.சி படித்த 67 வயது முதியவரின் மனுவையும் பரிசீலிக்க வேண்டும்: மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : PUC ,ICourt ,CHENNAI ,P.U.C. ,admission ,Dinakaran ,
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு