
செங்கல்பட்டு: பரனூர் சுங்கச்சாவடி அருகே ஜிஎஸ்டி நெடுஞ்சாலையிலேயே நிறுத்தப்படும் கனரக லாரிகளால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இவற்றை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில், திருச்சி-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியே நாள்தோறும் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், லாரிகள் உள்பட பல்வேறு கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், திருச்சி – சென்னை மார்க்க சுங்கச்சாவடியை கடக்கும் கனரக லாரிகள் அங்கு சாலையோர கடையில் டீ குடிப்பதற்காக, ஜிஎஸ்டி சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, டிரைவர்கள் டீ குடிக்க சென்றுவிடுகின்றனர். இதனால், அவ்வழியே சென்னை நோக்கி செல்லும் சாலையில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மேலும், அப்பகுதியில் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து வாகனங்கள் வெளியேறுவதற்கு வழியின்றி, நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுகிறது. இந்த வாகன நெரிசல் சில சமயங்களில் நீண்ட தூரம் வரை நீண்டு விடுகிறது.
இதுபோன்ற வாகன நெரிசல்களில் சுங்கச்சாவடி ஊழியர்களும் கண்டுகொள்வதில்லை. நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து போலீசாரும் லாரி டிரைவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அலட்சியமாக சென்றுவிடுகின்றனர். இந்த வாகன நெரிசலில் ஆம்புலன்ஸ்களும் பல சமயங்களில் சிக்கி வெளியேற முடியாமல், அதில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளில் சிலர் நடுவழியிலேயே மரணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இத்தகைய அவலநிலையை தடுக்க பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து வெளியே வரும் கனரக லாரிகள் குறிப்பிட்ட தூரத்துக்கு ஜிஎஸ்டி சாலையில் நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வாகனங்களின் டிரைவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post பரனூர் சுங்கச்சாவடி அருகே ஜிஎஸ்டி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.