×

ஆசிய கோப்பை ஒருநாள் தொடர்; இந்திய அணியில் ராகுல், ஷ்ரேயாஸ்: திலக் வர்மாவுக்கும் வாய்ப்பு

புதுடெல்லி: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஐசிசி உலக கோப்பைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் ஆக.30ம் தேதி தொடங்கி செப். 17 வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. அஜித் அகர்கர் தலைமையிலான குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். பின்னர், ரோகித் ஷர்மா தலைமையில் மொத்தம் 17 வீரர்கள் அடங்கிய அணியை அகர்கர் அறிவித்தார்.

காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த முன்வரிசை பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி வளாகத்தில் நடந்த பரிசோதனையில் இருவரும் தங்கள் உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து, ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளனர். அயர்லாந்து டி20 தொடரில் விளையாடி வரும் வேகப் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணாவும் ஆசிய கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திலக் வர்மா (20 வயது) அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். ஸ்பின்னர்கள் குல்தீப், ஜடேஜா, அக்சர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், யஜ்வேந்திர சாஹல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர்கள் ராகுல், இஷான் இடம் பெற்றுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அணியுடன் பயணிக்க உள்ளார். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் செப்.2ம் தேதி பல்லெகெலே மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அடுத்து செப்.4ல் நேபாள அணியுடன் மோதுகிறது.

பி பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றில் விளையாடும். அந்த சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் கொழும்புவில் செப்.17ம் தேதி பைனலில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், அக்சர் படேல், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிரிஷ்ணா. ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன்.

The post ஆசிய கோப்பை ஒருநாள் தொடர்; இந்திய அணியில் ராகுல், ஷ்ரேயாஸ்: திலக் வர்மாவுக்கும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Asia Cup ODI Series ,Rahul ,Shreyas ,Thilak Verma ,New Delhi ,Indian ,KL Rahul ,Tilak Varma ,Dinakaran ,
× RELATED இப்போது இருந்தால்...