×

எங்காளு சுற்றுப்பயணத்துக்கு பிறகு நிலைமையே மாறும் என உதார் காட்டும் தேனிக்காரர் கோஷ்டிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘போன இடத்துல தொண்டர்களுக்கு வயிறு சரியில்லாம போய்டுச்சாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி, பல பிரிவுகளாக பிரிஞ்சு இருக்குது. இதுல ஒரு பிரிவுக்காரங்க, மாநாடு நடத்துனாங்க. இதுக்காக ஆரம்பத்துல இருந்தே ஆள்புடிக்குற வேலை கடந்த ஒரு மாசத்துக்கும் மேலாக நடந்துச்சு.அடிச்சு புடிச்சு ஆள் சேர்த்து கூட்டிகிட்டு போறதுக்குள்ள இலை நிர்வாகிங்க திணறிட்டாங்களாம். காலையில தொடங்கி இரவு வரைக்கும் அரசியல் மாநாடு மாதிரி இல்லாம, ஏதோ நட்சத்திர கலை நிகழ்ச்சி நடந்த மாதிரி, கச்சேரி, மிமிக்ரின்னு நல்லா இருந்துச்சாம்.

முன்னாள் அமைச்சர் ஒருத்தரு சினிமா பாட்டுக்கு அவர் தொடையில தட்டி தாளம்போட, பக்கத்துல இருந்த மாஜி அமைச்சர் என்னப்பா.. இதுன்னு தடுத்து நிறுத்த நல்லா என்ஜாய் பன்னாங்களாம். ஆனா இதுல மாநாட்டுக்கு சேர்த்துக்கிட்டு போன தொண்டர்களுக்கு விருந்துக்கும் ஏற்பாடு ெசஞ்சாங்க. ஆசையா சாப்பிட போன இடத்துல, சாப்பாடு சரியில்லையாம். இதனால மாநாட்டுக்கு போன தொண்டருங்க, வயிற்றுபோக்கால அவஸ்தப்படுறாங்களாம். வடாற்காடு மாவட்டத்துல இந்த வயிற்றுபோக்கு பிரச்னை கொஞ்சம் அதிகமாவே இருக்குதாம். அதனால ரத்தத்தின் ரத்தங்கள் மாநாட்டுல இருந்து வர்றதுக்குள்ளவே புலம்பித்தீர்க்குறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆரம்பிச்சு வச்ச ஆளுங்களே ஆர்ப்பாட்டம்னு கௌம்புறாங்கன்னு புகார் வருதே.. என்னா விஷயம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்துல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறக்ககோரி இலை கட்சி சார்பா மணியானவர் தலைமையில ஆர்ப்பாட்டம் நடந்துச்சு.. இதுல கலந்துக்கிட்ட இலை கட்சி நிர்வாகிங்க மருத்துவ கல்லூரி கட்ட இடம் தேர்வு செய்து தந்தது முதல் கட்டிடம் கட்டியது வரை எல்லாம் நம்ம ஆட்சி காலத்துல தான். இடத்த தேர்வு செய்த போது போதிய வசதி இல்லைன்னு அரசு உயர் அதிகாரிங்க தெரிவிச்சும் தங்களோட சுயலாபத்துக்காக அந்த இடத்துல மருத்துவ கல்லூரிய பிடிவாதமா கட்டினாங்க நம்ம ஆளுங்க…

இப்போ அந்த இடத்துல போதிய வசதி இல்லாததால மருத்துவமனைய திறக்க முடியல… ஒன்றிய அரசு மதுரையில எய்ம்ஸ் ஆஸ்பத்திரிய திறப்பதா கூறி இடத்தை மட்டும் தேர்வு செஞ்சு வச்சுருக்கறது போல, இங்கயும் அடிப்படை வசதிகள் இல்லாத இடத்துல ரூ400 கோடியை செலவு செஞ்சுபுட்டு மருத்துவமனைய திறக்க சொல்லி நாமே ஆர்ப்பாட்டம் நடத்தறது விந்தையா இருக்குதுன்னு புலம்பியபடியே போனாங்க..’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘மாநாட்டு புகார் தீராது போலயே…’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கூடல் நகர்ல சேலத்துகாரர் நடத்திய மாநாட்டுக்கு தென்மாவட்டத்துல பலத்த எதிர்ப்பு கிளம்புச்சு. தெற்க அவரு பலத்த காட்டக்கூடாது என நினைச்சே பல இடங்களில் மாநாட்டுக்கு எதிரா சுவரொட்டிகள ஒட்டினாங்களாம்.

தென்மாவட்டங்களில் பல இடத்துல வேனை வைச்சிக்கிட்டு ஆட்கள அழைச்சும் பொதுமக்கள் மாநாட்டுக்கு வரலையாம். வேற வழியில்லாம சில ஊர்களில் ஆளுக்கு ஆயிரம் வரை பேசி வேன்ல ஆள ஏத்திக் கொண்டு போனாங்களாம். ஒரு மாநாட்ட நடத்தி முடிக்கிறது, ஒரு எலக்‌ஷன சந்திக்கிற மாதிரி பணத்த தண்ணியா செலவழிக்க வேண்டியதிருக்கு என இலை தரப்பு நிர்வாகிகள் எக்கசக்கமா நொந்து போய்ட்டாங்க. வேன்ல போனவங்கள தொலை தூரத்துல இருந்தே மாநாட்டு பந்தல காட்டிட்டு, அப்படியே கூட்டிட்டு வந்தாங்கன்னும் பொதுஜனம் புலம்பிக்கிட்டு இருக்குதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியின் தலைவர் பதவிக்கு வந்த சேலத்துக்காரர் ரொம்பவே ஹேப்பியா இருக்காராமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. கொங்கு மண்டலத்தில்தான் பலம் இருக்குன்னு சொன்னவங்களுக்கு சரியான பதிலடி கொடுக்கணுமுன்னு போட்ட திட்டத்துக்கு தூங்கா நகரத்து மாநாடு கை கொடுத்திருக்குனு நினைக்கிறாராம். எங்க பார்த்தாலும் நம்ம பத்தி தான்யா கோஷம்னு நெருங்கிய ஆட்கள் கிட்ட மலர்ந்த சிரிப்போட சொல்லிக்கிட்டு இருந்தாராம். இனி இந்த கட்சிக்கு என்னைய விட்டா வேறு யாரும் தலைவரா வரமுடியாதுனு வேற சொல்றாராம்.

எத்தனை கோடிகள் வைத்திருந்தாலும் செலவு செய்யவேண்டிய இடத்தில் செலவு செஞ்ச எங்கள் தலைவர், இனி இலைக்கட்சிய யாரும் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் எங்கேயோ கொண்டு போகப் போறார்னு அடிப்பொடிகள் வேற சொல்லிட்டு திரியறாங்களாம். இதனால் தேனிக்காரர் கோஷ்டி கொஞ்சம் காண்டுல தான் இருக்கு. ரொம்ப துள்ளாதீங்க.. தொண்டர்களுக்கு சோத்தை கூட நல்லா போட வக்கில்ல.. வாய் மட்டும் போகுதாக்கும் என்று தேனியின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். எங்காளு அடுத்து பயணத்தை தொடங்கப் போறாரு.. அப்புறம் பாருங்கய்யா எங்க பவரை.. நிலைமையே தலைகீழா மாறும் என்றும் கொக்கரிக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பாக்கெட்டுக்கு போனது மறுபடி கஜானாவுக்கே ரீப்பீட்டாகுதாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் உதவி கமிஷனர் அந்தஸ்தில் ஐந்து எழுத்து பெயர் கொண்ட ஒரு அதிகாரி பணிபுரிகிறார். இவர், மாநகராட்சி மாமன்ற ‘கவுன்சில் செக்ரட்டரி’ பணியை கவனித்து வருகிறார். இதற்கு முன்பு மாநகராட்சியின் சட்ட அதிகாரி பணியையும் சேர்த்து கவனித்து வந்தார். இதற்காக, கவுன்சில் செக்ரட்டரி கணக்கில் தனி சன்மானம், சட்ட அதிகாரி கணக்கில் தனி சன்மானம் என இரு பிரிவா அரசு கஜானாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக பணம் பெற்று வந்தார். ஆனால், தற்போது சட்ட அதிகாரி பணியை செய்யாவிட்டாலும், அதற்குரிய சன்மானத்தையும் சட்ட விரோதமாக பெற்று வந்துள்ளார்.

இது, சமீபத்திய தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதனால், சட்ட விரோதமாக அரசு கஜானாவில் இருந்து எடுத்த ரூ1.60 லட்சம் பணத்தை, மீண்டும் அரசு கஜானாவுக்கே செலுத்தவேண்டும் என தணிக்கை துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால், இவரது பாக்கெட்டுக்கு போன அரசு பணம், மீண்டும் அரசு கஜானாவுக்கே ரீப்பீட்டாகி வருகிறது. இந்த அதிகாரியின் மனைவி, சமீபத்தில், கோவையில் கட்டிட வரைபட அனுமதி பெறாமல், மூன்று மாடி கட்டிடம் கட்டி வந்தார். இந்த விவகாரம், ஆய்வின்போது கண்டறியப்பட்டு, கட்டுமான பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கணவனும், மனைவியும் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிவரும் விவகாரம், மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது’’ என்றார் விக்கியானந்தா.

The post எங்காளு சுற்றுப்பயணத்துக்கு பிறகு நிலைமையே மாறும் என உதார் காட்டும் தேனிக்காரர் கோஷ்டிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thenikar Koshtis ,Peter ,Thenicharkar ,
× RELATED தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து...