மும்பை: நடிகர் மற்றும் பாஜ எம்பியான சன்னி தியோலின் வில்லாவை ஏலம் விடுவதாக நேற்று முன்தினம் பரோடா வங்கி அறிவித்திருந்த நிலையில் இந்த ஏலம் நிறுத்தப்படுவதாக நேற்று தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் குருதஸ்பூர் தொகுதி பாஜ எம்பி மற்றும் நடிகர் சன்னி தியோல். இவர் பரோடா வங்கிக்கு ரூ.56கோடி கடன் நிலுவை தொகையை செலுத்த வேண்டி இருப்பதாக தெரிகிறது. இவரிடம் இருந்து நிலுவை தொகை பெறப்படாத நிலையில் இவருக்கு சொந்தமான பங்களாவை ஏலம் விடுவதற்கு வங்கி முடிவு செய்தது.
ஜூகுவில் உள்ள எம்பிக்கு சொந்தமான ‘சன்னி வில்லா’ வருகிற 25ம் தேதி ஏலம் விடப்படும் என்று பரோடா வங்கி ஞாயிறன்று அறிவிப்பு வெளியிட்டது. இ- ஏலம் மூலமாக பங்களா ஏலம் நடைபெற உள்ளதாகவும், ஏலத் தொகையாக ரூ.51.43 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சன்னி தியோலுக்கு சொந்தமான பங்களாவின் ஏலம் நிறுத்தப்படுவதாக பரோடா வங்கி நேற்று திடீரென அறிவித்துள்ளது. தொழில்நுட்ப காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கியின் இந்த திடீர் முடிவு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் டிவிட்டரில் விமர்சித்திருந்தார். இதையடுத்து பரோடா வங்கி வெளியிட்ட விளக்கத்தில், வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைகளை முழுவதும் செலுத்துவதாக எம்பி சன்னி தியோல் வங்கியை அணுகியுள்ளார். இதனால்தான், ஏலம் நிறுத்தப்பட்டதாக கூறியுள்ளது. கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கு சன்னி தியோல் ஒப்புக்கொண்டுள்ளதால் ஏலம் திரும்ப பெறப்படுவதாகவும், அதே நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post கடனை திருப்பி செலுத்தாத பாஜ எம்பி சன்னி தியோல் பங்களாவின் ஏலம் நிறுத்தம்: வங்கி நடவடிக்கையால் சர்ச்சை appeared first on Dinakaran.