×

கோவில்பாக்கம் பகுதியில் தண்ணீர் லாரி மோதி சிறுமி பலியான இடத்தில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு: கோவில்பாக்கம் பகுதியில் தண்ணீர் லாரி மோதி சிறுமி பலியான இடத்தில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கீழ்க்கட்டளை ஏரியையொட்டி நீர் எடுத்து செல்லும் வாகனங்கள் நிற்கும் இடத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். தண்ணீர் மற்றும் இதர லாரிகள் செல்வதற்கான நேரம் முறைப்படுத்தப்படும் என்று ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு அளித்துள்ளார். நன்மங்கலம் ஏரி கிணறுகளில் முறைகேடாக நீர் எடுத்து லாரிகள் மூலம் விநியோகம் செய்வது தடுக்கப்படும் என்றும் மெட்ரோ பணி முடிந்த பகுதியில் சென்டர்மீடியன் அமைத்து பைக்குகள் செல்வதற்கு வழிவகை செய்ய அறிவுறுத்தியுள்ளார். கோவிலம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால், ஸ்கூட்டரில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த 5ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் மீது, அவரது தாய் கண் முன்பே தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோவிலம்பாக்கம் அடுத்த நன்மங்கலம் ராஜாஜி நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாய் வெங்கடேஷ். இவருக்கு 10 வயதில் லியோ என்ற மகள் இருந்தார். இவர் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள பிரின்ஸ் வாரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். திங்கள் கிழமை என்பதால் வழக்கம் போல் இன்று காலை தனது தாய் கீர்த்தியுடன் வீட்டில் இருந்து 8.45 மணிக்கு ஸ்கூட்டரில் மகள் லியோ மடிப்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். கோவிலம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் கோவிலம்பாக்கம் முதல் ஈச்சங்காடு சிக்னல் வரை சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நத்தை போல் ஊர்ந்து சென்றது. கோவிலம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் நிலையம் எதிரே வரும் போது, சாலையின் இடையே உள்ள ஒரு அடி ஆழ பள்ளத்தில் ஸ்கூட்டர் இறங்கி ஏறியது.

இதில் பின்னால் அமர்ந்து இருந்த மகள் லியோ நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று, சாலையில் விழுந்த மாணவி லியோ மீது ஏறி இறங்கியது. இதில் தனது தாய் கீர்த்தி கண் முன்பே சம்பவ இடத்திலேயே மாணவி உடல் நசுங்கி துடிதுடித்தார். ஆனால் மாணவி லாரி சக்கரத்தில் சிக்கியதை கூட பார்க்காமல் லாரியை ஓட்டுநர் இயக்கினார். உடனே சாலையில் சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதை பிறகு தான் லாரியை ஓட்டுனர் நிறுத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே லியோ உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மகள் மீது லாரி ஏறியதை நேரில் பார்த்த அவரது தாய் கீர்த்தி தரையில் விழுந்து துடித்தார். இது அங்கு இருந்தவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி லியோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில், தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், வடக்கு பட்டு போன்று பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகிறது. எந்த தண்ணீர் லாரி ஓட்டுனர்களும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பள்ளிகள் நேரத்தில் அதிவேகமாக இயக்கியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது. எனவே பள்ளிகள் நேரத்தில் இதுபோன்ற தண்ணீர் லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக்கு சென்ற மாணவி ஒருவர் தனது தாய் கண்முன்னே தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கோவிலம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கோவில்பாக்கம் பகுதியில் தண்ணீர் லாரி மோதி சிறுமி பலியான இடத்தில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chengalputtu ,Kovilbakkam ,Chengalpadu ,Govilpakkam ,Gowilbakkam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து