×

நீட் தேர்வு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்: அமைச்சர்கள் ஆவேசம்

விழுப்புரம்: நீட் தேர்வுக்கு எதிராக விழுப்புரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விடாமல் நீதிமன்றத்துக்கு சென்று தடையாணை பெற்றார். இதனால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராகி நாடு முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். அடுத்து வந்த அதிமுக ஆட்சியாளர்கள் இந்த நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் விட்டுவிட்டனர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் நீட் தேர்வை நுழையவிடாமல் தடுத்தார். ஆனால் எடப்பாடி அரசு நீட் தேர்வை நுழைய விட்டு விட்டது. தமிழகத்திலேயே உயர் கல்வியில் 53 சதவீத கல்லூரிகளை கொண்டது தமிழ்நாடு தான். நீட் தேர்வு நுழைவு காரணமாக வடமாநிலத்திலிருந்து பலர் இங்கு சேருகின்றனர். இதனால் தமிழக மாணவ, மாணவிகள் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் 64 வாக்குறுதியில் தமிழகத்தில் நீட் தேர்வு விலக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்து சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால் இதற்கு ஆளுநரும், ஒன்றிய அரசும் பதில் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

தற்போது நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி அமைச்சர் உதயநிதி அறிவித்த போராட்டம் தான் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இது முதல் கட்டம் தான். தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வு தடை விதிக்கும் வரை இந்த போராட்டம் நடைபெறும், என்றார். கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பேசுகையில், நீட் தேர்வால் பல உயிர்களை காவு கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல், தான் தோன்றித்தனமாக செயல்படுகிறது. இன்றைய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக உள்ளது. எனவே இந்த நீட் தேர்வை ரத்து செய்ய திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. எனவே திமுகவை சேர்ந்த இளைஞர் அணியினர் மற்றும் மாணவர் அணியினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கட்டுக்கோப்பாக நடந்து கொண்டு தொடர்ந்து தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்த வேண்டும், என்றார். உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டமன்ற தீர்மானத்தை நீண்ட காலமாக கிடப்பில் போட்டுவிட்டு தற்போது கவர்னர் மீண்டும் அதை சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். உலகத்திலேயே காலை உணவு திட்டத்தை முதலில் கொண்டு வந்து செயல்படுத்தியவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். எதிர்க்கட்சிகளால் கொடுக்க முடியாது என்று கூறப்பட்ட மகளிர் உரிமை தொகை சாதாரண ஏழை குடும்பங்கள் அனைவருக்கும் வழங்கப்படும், என்றார்.

 

The post நீட் தேர்வு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்: அமைச்சர்கள் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Vilappuram ,Minister ,Ponmudi ,Viluppuram ,Chief Minister ,Karunanidi ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...