×

மனைவி சரமாரி அடித்து கொலை: கணவன் வெறிச்செயல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள அருவங்காட்டை சேர்ந்தவர் மாது (58). இவர் அதேபகுதியில் உள்ள நெசவு பூங்காவில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னம்மாள் (50). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு அருணாச்சலம் (28), பூபதிராஜா (25) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் அருணாச்சலத்திற்கு திருமணமாகி விட்டது. அருகில் உள்ள தொழில்பூங்காவில் நெசவாளராக வேலை செய்து வருகிறார். பூபதிராஜா ஈரோட்டில் ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மாது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அவர் வருமானத்தின் பெரும்பகுதியை மதுகுடித்து செலவழித்து வந்தார். இதனால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி பிரச்னை இருந்து வந்தது. நேற்று மதுரை மாநாட்டிற்கு கட்சிக்காரர்களின் அழைப்பின்பேரில் மாது சென்றார். அங்கிருந்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மனைவி பொன்னம்மாள் வீட்டின் முன்பு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் உள்ளே மகன்கள் 2 பேரும் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். மது போதையில் வந்த மாது, வராண்டாவில் படுத்திருந்த பொன்னம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, மகன்கள் உதவிக்கு வெளியே வரக்கூடாது என வெளிப்பக்கமாக கதவை பூட்டினார்.

இதனிடையே கணவன்- மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாது அருகில் கிடந்த கட்டில் காலால் பொன்னம்மாளை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பொன்னம்மாள் இறந்தார். இந்த தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொன்னம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக மாதுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநாட்டிற்கு சென்றுவிட்டு மது போதையில் திரும்பிய கணவன், வராண்டாவில் தூங்கிய மனைவியை கட்டில் காலால் அடித்து படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மனைவி சரமாரி அடித்து கொலை: கணவன் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Mathu ,Aruvangat ,Kumarapalayam ,Namakkal district ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு...