×

கொரட்டூரில் மது போதையில் பிரியாணி கடையில் தகராறு வாலிபர் சரமாரி வெட்டி கொலை: 3 பேர் கும்பலுக்கு வலை

அம்பத்தூர்: கொரட்டூரில் மது போதையில் நள்ளிரவு பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலா (எ) பாலசந்தர் (22). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்றிரவு 11.30 மணியளவில் மண்ணூர்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நண்பர்கள் 2 பேருடன் மது அருந்தினார். பின்னர் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். வழியில், ஒரு ஓட்டலில் பிரியாணி ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தனர். அந்த நேரத்தில் பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்களும் பிரியாணி ஆர்டர் செய்தனர். திடீரென அந்த 3 பேருக்கும், பாலா மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மது போதையில் இருந்ததால் வாக்குவாதம் அதிகரித்தது. கோபமடைந்த பாலா, தான் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் அந்த 3 பேரையும் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாவை சரமாரியாக வெட்டினர். தலை, காது பகுதியில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். இதையடுத்து அந்த கும்பல் பைக்கில் தப்பி சென்றது. பாலாவுடன் வந்தவர்களும் திகைத்தனர். தகவலறிந்து அம்பத்தூர் சரக காவல் உதவி ஆணையர் கிரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பாலாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கொரட்டூரில் மது போதையில் பிரியாணி கடையில் தகராறு வாலிபர் சரமாரி வெட்டி கொலை: 3 பேர் கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Koratur ,Korattur ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர், கொரட்டூரில் மழைநீர்...