டெல்லி: இறந்துவிட்ட நண்பரின் மகளுக்கு உதவுவதாக கூறி பாலியல் வக்ர செயலில் ஈடுபட்ட டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூத்த அதிகாரி மீது போக்சோ வழக்கு பாய்ந்ததை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தனது நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட அந்த மாணவி கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுக்கு இடையில் பலமுறை தமது வீட்டுக்கு அழைத்து வந்து அதிகாரி பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் மாணவி கர்மப்படைந்துள்ளார். அதுகுறித்து அதிகாரியின் மனைவியிடம் முறையிட்டபோது அவர் மருந்து வாங்கி தருவதாக கூறியதோடு, வீட்டில் வைத்தே கர்ப்பத்தை கலைத்ததாக பாதிக்கப்பட்ட அந்த மாணவி டெல்லி போலீசில் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். தற்போது 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் தந்தை கடந்த 2020ம் ஆண்டு இறந்துவிட்டார். எனவே நண்பரின் மகளுக்கு உதவுவதாக தமது வீட்டுக்கு அழைத்து வந்து மூத்த அதிகாரி பாலியல் வக்ர செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அந்த அதிகாரி மீது டெல்லி போலீசார் போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவரது செயலுக்கு துணை போன மனைவியின் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி தற்போது சிகிச்சையில் உள்ளார். அவர் தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். உயர் அதிகாரிகள் மீதான கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்ததை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான அறிவிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பேரில் அதிகாரியை கைது செய்யவும் டெல்லி காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
The post குழந்தைகள் மேம்பாட்டு பிரிவு அதிகாரியின் பாலியல் வக்ரம்!: டெல்லியில் சிறுமியை பலாத்காரம் செய்த அதிகாரி சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.