×

திருக்கழுக்குன்றம் அருகே தரைப்பாலம் உடைப்பு: 6 கிராம மக்கள் தவிப்பு

திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பாலாற்றின் நடுவே கடந்த 40  ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் பாலம் கட்டப்பட்டிருந்தது.  இதனையொட்டி, மணல் அள்ளியதாலும், பழமையான பாலமாகி விட்டதாலும் பாலத்தின் பல  பகுதிகள் உடைந்து காணப்பட்டு எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையை  எதிர்கொண்டிருந்தது.  இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு பெய்த  கனமழையால் பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில்  பழமையான இந்த பாலாற்று பாலம் உடைந்து வெள்ள நீரில் அடித்து சென்றது.  இதனால், இந்த பாலத்தையே நம்பி பயணித்து வந்த இரும்புலிச்சேரி, அட்டவட்டம்,  தேப்பனாம்பட்டு, சாமியார் மடம் உள்ளிட்ட 6 கிராமமக்கள் வெளியில்  வரமுடியாமல் தவித்தனர். இந்நிலையில், உடைந்த பாலத்திற்கு பதில் உடனடியாக புதிய  பாலம் கட்டி தரப்படும் என அப்போதிருந்த அதிமுக அரசு அறிவித்தது. இதனிடையே,  புதிய பாலம் கட்டும் வரை மக்கள் பாலாற்றை கடந்து வெளியில் சென்று வர தண்டரை  – கன்னிக்கோயில் என்ற இடத்தில் பாலாற்றின் தற்காலிக தரை பாலம்  அமைக்கப்பட்டது. தற்போது கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கன மழையால் பாலாற்றில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தற்காலிக  பாலம் நேற்று மீண்டும் உடைந்ததால் நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்து  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு  வெளியே வர வேண்டுமென்றால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி எடையாத்தூர்  பாலம் வழியே தான் வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே,  வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலத்தை நேற்று  திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு மற்றும் திருக்கழுக்குன்றம்  தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.சரவணன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி  மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உட்பட பலர் சென்று பார்வையிட்டு  அப்பகுதி மக்களை சந்தித்து அரசு தரப்பில் தேவையான அனைத்து உதவிகளும் பெற்று  தரப்படும் என்று நம்பிக்கையும் உறுதியும் அளித்தனர். இதனிடையே மழை வெள்ளத்தால் மூழ்கிப் போன இரும்புலிச்சேரி பாலத்தையும், நிரம்பி வழியும்  வாயலூர் தடுப்பணையையும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தடுப்பணையில் பொதுமக்கள் யாரும்  குளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அவருடன் மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர் தமிழ்செல்வி, திருக்கழுக்குன்றம்  தாசில்தார் சிவசங்கரன், துணை தாசில்தார் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன்  சென்றனர்….

The post திருக்கழுக்குன்றம் அருகே தரைப்பாலம் உடைப்பு: 6 கிராம மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thirukkulukulam ,Ironlicheri ,Thirukkukukuram ,
× RELATED திருக்கழுக்குன்றத்தில் பொது மருத்துவ முகாம்