×

கலைஞர் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: கலைஞர் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் இந்திய அரசியலின் திசையை தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும், சமுதாயத்தில் அதன் தாக்கத்தையும் வருங்காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தமிழினத் தலைவர் கலைஞரை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அறிவித்து நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், இந்த விழாக்கள் அமைய வேண்டும் என்றும், பெரிய அளவிலான ஆடம்பர நிகழ்ச்சிகளாக அல்லாமல் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளாக இவற்றை நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாகவும் அமைய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 22.05.2023 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள் தலைமையில் 12 சிறப்புக் குழுக்கள் அமைத்து ஆணையிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் முதல் நிகழ்ச்சியாக, கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான “கலைஞர் 100” இலச்சினை முதலமைச்சர் 2.6.2023 அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 15.6.2023 அன்று கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையும் 15.7.2023 அன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் முதலமைச்சர் திறந்து வைக்கப்பட்டன.

மேலும், 6.8.2023 அன்று சென்னையில் “கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான்-2023” நடத்தப்பட்டது. இப்போட்டியில் 73,206 நபர்கள் கலந்துகொண்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. 7.8.2023 அன்று “www.kalaignar100.com” இணையதளம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் இதுவரை 4 கூட்டங்கள் நடத்தப்பட்டு, அரசின் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையிலான 12 குழுக்களிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டு, மாநில, மாவட்ட அளவிலான பல்வேறு நிகழ்வுகளை நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில், மாநில அளவில் அமைக்கப்பட்ட 12 சிறப்புக் குழுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் மாநில அளவிலான கொண்டாட்டங்களும், 114 மாவட்ட அளவிலான கொண்டாட்டங்களும், 117 துறைவாரியான நிகழ்ச்சிகளும் நடத்த உத்தேசிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர், கலைஞர் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றும், கோவையில் கலைஞர் செம்மொழி பூங்காவிற்கும், சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கும் (Convention Centre) விரைவில் அடிக்கல் நாட்டிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட காலத்தில் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், நிகழ்ச்சிகள் அனைத்திலும் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பு அதிகம் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய பங்கின் மூலமாக நாட்டிற்கு அவர் எப்படி புகழ் சேர்த்தார் என்பது குறித்தும், அனைவரும் பயன்படுத்திடும் வகையில் கலைஞரைப் பற்றிய 100 பக்க வரலாறு வெளியிட்டு, அவற்றை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும், இன்றைய இளைய தலைமுறையிடம் கலைஞரின் ஆளுமையை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாக அமைய வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர்.துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர். இ. பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர். எ.வ. வேலு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர். தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர். சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர். த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புப் பணி அலுவலர். என். சுப்பையன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர். த. மோகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BCE ,G.K. Stalin ,Chennai ,B.C. G.K. Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...