×

கணவரின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்தக் கோரி கழுகுமலை காவல்நிலையத்தில் மகனுடன் இளம்பெண் தர்ணா

கழுகுமலை : கணவரின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்தக்கோரி கழுகுமலை காவல் நிலையத்தில் 4வயது மகனுடன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், ஆவாரந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டியின் மகள் காளீஸ்வரி (28). செவிலியர் படிப்பு முடித்துள்ள இவருக்கும், நெல்லையைச் சேர்ந்த ஆனந்தசெல்வம் என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் 4 மாதங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக காளீஸ்வரி வேலை பார்த்தபோது அவருக்கும், உறவினரான கழுகுமலை அண்ணா புதுத்தெருவைச் சேர்ந்த ராஜபாண்டியின் மகன் ஆனந்த் பாபு (32) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காளீஸ்வரி, ஆனந்த்பாபுவை கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து தம்பதியருக்கு ஆரிஸ் மித்ரதேவ் என்ற மகன் பிறந்தான். தற்போது மகனுக்கு 4 வயது ஆகும் நிலையில் ஆனந்த்பாபு, தனக்கு ஏற்கனவே காளீஸ்வரியுடன் நடந்த திருமணத்தை மறைத்து விட்டு தென்காசி மாவட்டதைச் சேர்ந்த வேறு ஒரு பெண்னை மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இதுகுறித்து தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த காளீஸ்வரி, கணவர் ஆனந்த்பாபுவின் வீட்டுக்குச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றார்.

ஆனால், அப்போது கணவர் ஆனந்த் பாபு, அவரது தாய் முத்துலட்சுமி, தந்தை ராஜபாண்டி ஆகிய மூவரும் சேர்ந்து காளீஸ்வரையும், அவரது தாயாரையும் அவதூறாகப் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதனால் பாதிக்கப்பட்ட காளீஸ்வரி இதுகுறித்து புகார் அளிக்க நேற்று முன்தினம் கழுகுமலை காவல் நிலையம் வந்தார். ஆனால், போலீசாரோ நீங்கள் திருமணம் செய்து வசித்த பகுதி நெல்லை என்பதால், அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்தனராம்.

அதன்பேரில் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காளீஸ்வரி சென்றபோது அங்கிருந்த போலீசார், திருமணம் திருப்பரங்குன்றத்தில் வைத்து நடைபெறுவதால், அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினராம். இதனால் ஆவேசமடைந்த காளீஸ்வரி, தனது 4 வயது மகனுடன் நேற்று முன்தினம் இரவு கழுகுமலை காவல் நிலையம் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவரை சமரசப்படுத்திய போலீசார், இதுதொடர்பாக மதுரை அல்லது நெல்லையில்தான் புகார் அளிக்க முடியும் எனத் திட்டவட்டமாகக் கூறினராம். இதையடுத்து அவர் பாளையில் செயல்படும் நெல்லை சரக டி.ஐ.ஜி.யிடம் புகார் அளிக்க செல்வதாகக் கூறிச்சென்றார்.

The post கணவரின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்தக் கோரி கழுகுமலை காவல்நிலையத்தில் மகனுடன் இளம்பெண் தர்ணா appeared first on Dinakaran.

Tags : dharna ,Galgakumalai ,police station ,Kalgukumalai ,Kalkumalai police station ,Dinakaran ,
× RELATED தேவர்குளம் காவல்நிலைய பிரச்சனை...