×

கடல் கடந்த காதல் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை மணந்த கடலூர் பட்டதாரி

கடலூர் : கடல் கடந்த காதலால் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கடலூர் பட்டதாரி இளைஞர் திருமணம் செய்து கொண்டார். கடலூர் அருகே திருமாணிக்குழி டி. புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் மகன் பத்மநாபன். எம்பிஏ பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பு நாளடைவில் அவர்களிடையே காதலாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். எனினும் தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் நேற்று கடலூர் அருகே வி.காட்டு பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் பத்மநாபனின் உறவினர்கள் மற்றும் ரோனமி டியாங்கோ குவாங்கோவின் உறவினர்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர். இது குறித்து பத்மநாபன் கூறுகையில், நான் சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிபுரிந்த போது காதல் ஏற்பட்டதால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். பின்னர் நான் அவரின் பெற்றோரை சந்தித்து எங்கள் காதல் குறித்து கூறினேன். அவர்கள் உடனே இதற்கு சம்மதம் தெரிவித்ததால் எங்களுக்கு திருமணம் நடந்தது, என்றார்.

மணப்பெண் ரோனமி டியாங்கோ குவாங்கோ கூறுகையில், எனக்கு தமிழ் கலாசாரம் மிகவும் பிடித்துள்ளது. எங்கள் ஊரில் திருமணங்களை மிக எளிதாக நடத்துவோம். ஆனால் இங்கு இவ்வளவு விமரிசையாக நடப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.

பிரான்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த விழுப்புரம் வாலிபர்

விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்த வேலுமணி-பரமேசுவரி தம்பதியின் மகன் விக்டர் (எ) அஜித்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் படிப்புக்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். படித்த பின்னர் அங்கு வேலை செய்து வந்த விக்டருக்கு, அந்த நாட்டை சேர்ந்த கேன்சா என்ற இளம்பெண்ணுடன் காதல் மலர்ந்து. இதை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த காதலர்கள், தங்களது வீட்டில் பேசி சம்மதம் பெற்றனர்.

இதன் பின்னர் விழுப்புரத்துக்கு தனது காதலி கேன்சா மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரை விக்டர் அழைத்து வந்தார். தொடர்ந்து ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளான நேற்று விழுப்புரத்தில் விக்டர் (எ) அஜித்குமார்-கேன்சா திருமணம் நடைபெற்றது. இருவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.

The post கடல் கடந்த காதல் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை மணந்த கடலூர் பட்டதாரி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cadalore ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை