×

ருதுராஜ் 58, சாம்சன் 40, ரிங்கு 38 இந்தியா 185 ரன் குவிப்பு

டப்ளின்: அயர்லாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில், இந்தியா டிஎல்எஸ் விதிப்படி 2 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி மலாஹைடு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசியது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெயிக்வாட் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர்.

ஜெய்ஸ்வால் 18 ரன் விளாசி யங் பந்துவீச்சில் கேம்பர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த திலக் வர்மா 1 ரன்னில் வெளியேற, இந்தியா 4.1 ஓவரில் 34 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ருதுராஜ் – சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியில் இறங்க இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தனர். சாம்சன் 40 ரன் (26 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஒயிட் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அரை சதம் அடித்து அசத்திய ருதுராஜ், 58 ரன் (43 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மெக்கார்தி பந்துவீச்சில் டெக்டர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் – ஷிவம் துபே இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை பதம் பார்த்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தது. ரிங்கு 38 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி மார்க் அடேர் வேகத்தில் யங் வசம் பிடிபட்டார். இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது. ஷிவம் துபே 22 ரன் (16 பந்து, 2 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அயர்லாந்து பந்துவீச்சில் மெக்கார்தி 2, அடேர், யங், ஒயிட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 186 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது.

The post ருதுராஜ் 58, சாம்சன் 40, ரிங்கு 38 இந்தியா 185 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ruduraj ,Samson ,Ringu ,India ,Dublin ,2nd T20 ,Ireland ,Rudhuraj ,Dinakaran ,
× RELATED ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது...