×

வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நரிக்குறவ இன மக்களுக்கு 400 கடைகள் அமைத்து தர திட்டம்: வருவாய் ஈட்ட நடவடிக்கை; அதிகாரிகள் தகவல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நல திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நில மேம்பாடு, வீடுகள் கட்டி தருதல், சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகளை மேம்படுத்துதல் தனிநபர் மற்றும் குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த நிதியாண்டின் புதிய முன்னெடுப்புகளை பொறுத்தவரை வீடுகள் இல்லாத பழங்குடியினருக்கு 1094 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் செங்கல்பட்டு, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு ரூ.3.66 கோடி பங்கு தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின்படி, வருவாய் வட்டார அளவில் மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காடு அல்லது அதற்கு மேல் பழங்குடியின மக்கள் வசிக்கும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 10 மலைப்பகுதிகளில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்ட பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்குடியின குடியிருப்புகளில் வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்தாண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையில் பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டிற்காக தேனீ வளர்ப்பு, மருத்துவ மூலிகை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இயற்கை மிளகு விளைவித்தல், கோட்டா பானை தயாரித்தல், காளான் வளர்ப்பு, மூங்கில் தளவாடங்கள் தயாரித்தல், துரித உணவகங்கள் அமைத்தல் மற்றும் நரிக்குறவர்களுக்கான பிரத்யேகமான கட்டமைப்புகள் போன்ற வருவாய் ஈட்டும் திட்டங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து பழங்குடியினர் நலத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:

இதுவரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்த நரிக்குறவர்கள் தற்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, அவர்களுக்கான பிரத்யேக கட்டமைப்பை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தான், நரிக்குறவ மக்களுக்கு 500 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தற்போது அவர்களுக்கு கடைகள் அமைத்து தர திட்டமிட்டுள்ளோம். அந்தவகையில் தமிழ்நாட்டில், இந்துசமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் நரிக்குற மக்களுக்கு ஒரு கோயிலுக்கு, ஒரு கடை வீதம் 400 கடைகள் அமைத்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது. ஒரு மாதத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேல் வருவாய் வரக்கூடிய கோயில்களில் கடைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அந்தவகையில் தான், நரிக்குறவர்களுக்காக கோயில்களில் 100 சதுர அடி பரப்பளவில் இடம் தர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கியோஸ்க் கடைகள் போல, நரிக்குறவர்களுக்கும் கடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதேபோல, தேர்ந்தெடுக்கப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் விளையும் பொருட்கள் என்ன? அவைகளை நரிக்குறவர்கள் விற்பனை செய்ய முடியுமா உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகளில் உட்படுத்தப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.

The post வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நரிக்குறவ இன மக்களுக்கு 400 கடைகள் அமைத்து தர திட்டம்: வருவாய் ஈட்ட நடவடிக்கை; அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Fox ,Government of Tamil Nadu ,Adi Dravidians ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...