×

வேகவதி ஆற்றங்கரையில் வீடு கட்டி வாழும் காஞ்சிபுரம் மக்களை வேறு இடங்களுக்கு மாற்றக்கூடாது: அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: ‘‘காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வீடு கட்டி வாழும் ஏழை மக்களை வேறு இடங்களுக்கு மாற்றக்கூடாது’’ என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் நகரத்தின் மையப் பகுதியில் வேகவதி ஆற்றங்கரையில் குடிசைமாற்று வாரிய வீடுகளிலும், தனி வீடுகளிலும் வாழ்ந்து வரும் 3,524 குடும்பங்களில் 600 குடும்பத்தினரை அங்கிருந்து அகற்றி கீழ்க்கதிர்பூரில் புதிதாக கட்டிய குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு அனுப்ப காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 52 ஆண்டுகளுக்கும் மேலாக வேகவதி ஆற்றங்கரையில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அகற்ற துடிப்பது கண்டிக்கத்தக்கது.

வேகவதி ஆற்றின் நீரோட்டப் பாதையை அதிகரித்து கரைகளை கட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. இதை ஏற்க முடியாது. வேகவதி ஆற்றங்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையினர் நெசவுத்தொழில் செய்பவர்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்கள். அவர்களுக்கு புதிய இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்காது. எனவே காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்கள் அனைவரும் அதே இடத்தில் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முடிவை கைவிடும்படி காஞ்சிபுரம் கலெக்டருக்கு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வேகவதி ஆற்றங்கரையில் வீடு கட்டி வாழும் காஞ்சிபுரம் மக்களை வேறு இடங்களுக்கு மாற்றக்கூடாது: அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Vegavathy river ,Ramadas ,Chennai ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?