×

8 பெட்டிகள் கொண்ட காவி நிற வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது

சென்னை: 8 பெட்டிகள் கொண்ட காவி நிற வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. சென்னை ஐ.சி.எப்.பில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூர், சென்னை-கோவை, திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2023-24ம் நிதியாண்டில் சென்னை ஐ.சி.எப்.பில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் பெட்டியின் வெளிப்புற நிறத்தை காவி நிறத்திற்கு மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. வெள்ளை நிறத்தால் ரயில் பெட்டிகள் அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்துள்ளோம் என்றும் வாரியம் தெரிவித்திருந்தது. அந்தவகையில், முழுவதும் காவி நிறத்தினால் ஆன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. பெரம்பூர் ஐ.சி.எப். முதல் பாடி ரயில் நிலையம் வரையில் இயக்கி பார்க்கப்பட்டது. மொத்தம் 8 பெட்டிகள் கொண்டதாக ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 8 பெட்டிகள் கொண்ட காவி நிற வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,CHENNAI ,ICF ,Dinakaran ,
× RELATED சென்னை-திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்: 2 மாதங்களில் சோதனை