×

கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலையில் திடுக் தகவல்கள் அண்ணன் கொலைக்கு 8 ஆண்டு காத்திருந்து பழி தீர்த்த பிரபல ரவுடி பாம் சரவணன்: சரணடைந்த 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலையில், சகோதரர் தென்னரசு கொலைக்கு கடந்த 8 ஆண்டுகள் காத்திருந்து பிரபல ரவுடி பாம் சரவணன், தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொலை செய்த திடுக்கிடும் தகவல்களை சரணடைந்த 3 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலமாக அளித்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள மற்றவர்களை பிடிக்க தனிப்படை மதுரை விரைந்துள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரபல ரவுடிஆற்காடு சுரேஷை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

இது குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மண்ணடி ஆறுமுகம் மற்றும் வேந்தகுமார் ஆகியோர் மூலம் திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் பகுதியை சேர்ந்த சந்துரு (எ) சைதாப்பேட்டை சந்துரு (29), எம்ஜிஆர் நகர் சூளைபள்ளம் வெங்கட்ராமன் சாலையை சேர்ந்த யமஹா மணி (எ) மணிவண்ணன் (26), ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மோசூர் சாலையை சேர்ந்த ஜெயபால் (63) ஆகியோர் சரணடைந்தனர். மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்த 3 குற்றவாளிகள் விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

சென்னை வியாசர்பாடி எம்.பி. சாலையை சேர்ந்தவர் ஆதிமூலம். இவருக்கு 7 மகன்கள். அதில் 5வது மகன் தான் தென்னரசு. வடசென்னை பிரபல ரவுடி வெள்ளை ரவியின் வலது கரமாக இருந்தார். ரவுடி தென்னரசு மீது 3 கொலை உள்ளிட்ட 23 வழக்குகள் இருந்தது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு தென்னரசு கூட்டாளியான சின்னா, வழக்கறிஞர் பகத்சிங்கையும் ஆற்காடு சுரேஷ் தரப்பு வெட்டி கொன்றது இதனால், தென்னரசு, ஆற்காடு சுரேஷ் மீது கடும் கோபத்தில் அவரது நண்பர்பெரம்பூர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்த வெள்ளை உமாவை 2011ம் ஆண்டு தென்னரசு தரப்பினர் வெட்டி கொன்றனர். இதனால் ஆற்காடு சுரேசுக்கும் ரவுடி தென்னரசுக்கும் நேரடி மோதல் வெடித்தது.

இதற்கிடையே ரவுடி தென்னரசு பெரியமேடு பகுதியில் ஐரீஸ் என்பவரை வெட்டி கொலை செய்தார். அதேநேரம் கொலையான ஐரீஸ் உறவினரான அம்பேத்கர் என்பவரை தனக்கு கேபிள் டிவி பணம் வசூலித்து கொடுக்கும் பணியை வழங்கி உடன் வைத்துக்கொண்டார். அம்பேத்கரும் ரவுடி தென்னரசுக்கு விசுவாசமாக தான் வேலை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அம்பேத்கர் கேபிள் டிவி மூலம் வசூலிக்கும் பணத்தை கையாடல் செய்துள்ளார். இது தென்னரசுக்கு தெரியவந்தது. எனவே, அம்பேத்கரை அடித்து உதைத்து வெளியே அனுப்பினார். இதனால் அம்பேத்கர் ரவுடி தென்னரசுக்கு எதிராக உள்ள ஆற்காடு சுரேஷ் கோஷ்டியில் சேர்ந்தார்.

பிறகு ஆற்காடு சுரேஷுடன் இணைந்து ரவுடி தென்னரசை கடந்த 2015ம் ஆண்டு தாமரைப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் வெட்டி கொலை செய்தனர்.சகோதரர் தென்னரசு கொலை செய்யப்படும் போது, அவரது தம்பியும் பிரபல ரவுடியுமான பாம் சரவணன் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும், தனது சகோதரன் தென்னரசுவை கொலை செய்த 3 பேரை வெட்டி கொலை செய்தார். இந்நிலையில், தென்னரசு போலீசாரின் வாகன சோதனையின் போது சிக்கினார்.அவர் வேலூர் சிறையில் இருக்கும் போது பாம் சரவணன், ஆற்காடு சுரேஷ் சகோதரர் புண்ணை பாலுவிடம், ‘எனது சகோதரனை நீங்கள் கொலை செய்தது போல் நான் உன் அண்ணன் ஆற்காடு சுரேஷை கொலை செய்வேன்’ அப்போது தான் உனக்கு அந்த வலி தெரியும் என்று என்று எச்சரித்துள்ளார்.

அப்போது தான் கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை கைதியான ஜெயபாலுடன் பாம் சரவணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், ஜெயபால், பாம் சரவணனிடம் வழக்கு ஒன்றில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்ய தானும் உதவுவதாக கூறினார். இதற்கிடையே தென்னரசுவின் 7ம் ஆண்டு நினைவு தினம் கடந்த பிப்ரவரி மாதம் அனுசரிக்கப்பட்டது. அப்போது பாம் சரவணன், பல ஆண்டுகளாக தப்பித்து வரும் ஆற்காடு சுரேஷை வெட்டி கொலை செய்து பழி தீர்ப்பேன் என்று தென்னரசு மனைவி மைதிலியிடம் சபதம் செய்துள்ளார். அதன் பிறகு சகோதரன் கொலைக்கு உதவி செய்ய வந்த ஜெயபால், யமஹா மணியை அழைத்து வந்தார். பின்னர் ஆற்காடு சுரேஷை கடந்த 6 மாதங்களாக பின் தொடர்ந்துள்ளனர்.

அப்போது தான் ஆற்காடு சுரேஷ் 2018ம் ஆண்டு புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராதா என்பவர் கொலை வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை எழும்பூர் நீதிமன்றத்திற்கு வருவது தெரியவந்தது. பின்னர் பாம் சரவணன் தனது கூட்டாளிகளான சந்துரு (எ) சைதாப்பேட்டை சந்துரு உள்பட 7 பேர் வெள்ளை கலர் ‘டாடா சபாரி’ காரின் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். பாம் சரவணன் மட்டும் காரில் இருந்தபடியே ஆற்காடு சுரேஷை கண்காணிக்கும்படி கூறியுள்ளார். அப்போது திட்டமிட்டப்படி ஆற்காடு சுரேஷ் தனது நண்பர்களான சீசிங் ராஜா, தட்சிணாமூர்த்தி, நவநீதகிருஷ்ணன் ஆகியோருடன் எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்தார். பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்ததும் ஆற்காடு சுரேஷ் தனது நண்பர்கள் 3 பேரிடம் சிறிது நேரம் பேசினார்.

தொடர்ந்து 3 பேரும் தங்களுக்கு பாதுகாப்புக்கு வந்தவர்களுடன் தனித்தனியாக காரில் சென்றனர். பிறகு ஆற்காடு சுரேஷ் தனது வழக்கறிஞர் அமல்ராஜ், நண்பர் மோகன் ஆகியோருடன் காரில் புறப்பட்டு சென்றுள்ளார். உடனே பாம் சரவணனுடன் ஜெயபால், யமஹா மணி, சந்துரு உள்ளிட்ட 5 பேர் காரில் ஏறி உள்ளனர். ஆற்காடு சுரேஷ் சென்ற காரை பின்தொடர்ந்து வந்த போது, அவர் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள ‘மீனவன் உணவகம்’ அருகே காரை நிறுத்திவிட்டு தனது நண்பர் மோகன், வழக்கறிஞர் அமல்ராஜ் ஆகியோருடன் மீன் வகைகளை ஆற்காடு சுரேஷ் வாங்கி உள்ளார்.

அப்போது ஆற்காடு சுரேஷ் வருகைக்காக லூப் சாலையில் அவரது நண்பர் மாது காத்து இருந்தார். மோகன் மற்றும் வழக்கறிஞர் அமல்ராஜ் ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.
ஆற்காடு சுரேஷ் மட்டும் நண்பர் மாதுவுடன் உணவகம் எதிரே உள்ள கடற்கரை மணல் பரப்பில் மது குடித்துள்ளார். இதை பாம் சரவணன் உள்பட அனைவரும் காரில் இருந்தபடியே கண்காணித்துள்ளனர். ஆற்காடு சுரேஷ், நண்பர் மாது அவரது காருக்கு நடந்து வரும் போது, ஜெயபால் உள்ளிட்ட 5 பேர் அரிவாளுடன் ஆற்காடு சுரேஷை முகத்திலேயே வெட்டி படுகொலை செய்துள்ளனர். அப்போது பாம் சரவணன் காரில் இருந்தபடியே 5 பேரும் வெட்டுவதை பார்த்து ரசித்துள்ளார்.

காரில் இருந்து அனுப்பும் போதே பாம் சரவணன் ‘தனது சகோதரன் தென்னரசுவை தலை மற்றும் முகத்தில் தான் வெட்டி கொன்றனர். எனவே நீங்கள் தலை மற்றும் முகத்தில் தான் வெட்ட வேண்டும்’’ என்று கூறி அனுப்பியுள்ளார். அதன்படி ஆற்காடு சுரேஷை தலை மற்றும் முகத்தை வெட்டி சிதைத்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது சகோதரன் தென்னரசு மனைவி மைதிலிக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றியதாக பாம் சரவணன் சந்ேதாசப்பட்டதாக சரணடைந்த ஜெயபால், யமஹா மணி, சந்துரு ஆகியோர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணை மற்றும் சிசிடிவி காட்கிகள் மூலம் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட போது குற்றவாளிகள் தப்பி சென்ற காரில் ‘பாம் சரவணன்’ இருந்ததை உறுதி செய்துள்ளனர்.

*அரசியல் கட்சி பிரமுகரை கொலை செய்ய சதித்திட்டம்?
சென்னையில் பிரபல அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்ய கூலிப்படையின் ஒரு தரப்பினர் தயாராகி வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக அண்ணாசாலையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் இரவு நேரத்தில் ஏ பிளஸ் ரவுடிகள் தினமும் வந்து டீ மற்றும் பன் சாப்பிட்டுவிட்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், ஆற்காடு சுரேஷ் கொலையில் சரணடைந்த 3 பேரில் ஒருவரின் மனைவியுடன், அந்த அரசியல் கட்சி பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்காக அந்த அரசியல் கட்சி பிரமுகரை கொலை ெசய்ய அந்த நபர், பிரபல ரவுடி ஒருவரிடம் உதவி கோரியுள்ளார். அதற்கு அந்த ரவுடியும் உதவி ெசய்வதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கான உதவியாகத்தான் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அந்த நபர் தானாக முன்வந்து, நானும் கொலை செய்ததாக சரணடைந்ததாக போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

The post கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலையில் திடுக் தகவல்கள் அண்ணன் கொலைக்கு 8 ஆண்டு காத்திருந்து பழி தீர்த்த பிரபல ரவுடி பாம் சரவணன்: சரணடைந்த 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Arkadu Suresh ,Bam Saravanan ,Chennai ,Tennarasu ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!