×

ஹிஜாப் அணிந்து வந்த ஆசிரியைக்கு இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு

திருவண்ணாமலை: ஒன்றிய அரசின் அங்கீகாரத்துடன் செயல்படும் தக்‌ஷிணா பாரத் இந்தி பிரசார சபா எனும் இந்தி மொழி கல்வி நிறுவனம், தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 முறை இந்தி தேர்வுகளை நடத்தி சான்றுகளை வழங்குகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் கடந்த 12ம் தேதி மற்றும் 13ம் தேதிகளில் இந்தி பிரவேசிகா தேர்வு நடத்தப்பட்டது. அதன் அடுத்த நிலையான பிராதமிக் தேர்வு நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தேர்வு மையம், கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி புதூரில் உள்ள அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு மையத்தில் 540 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி, காலை 10 மணிக்கு இந்தி தேர்வு தொடங்கியது. அதில், தனியார் பள்ளியில் அரபிக் ஆசிரியராக பணிபுரியும் திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த ஷபானா (30) என்பவர், ஹிஜாப் அணிந்தபடி தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். தேர்வு தொடங்கி சுமார் 10 நிமிடங்கள் கடந்த நிலையில், அறையை பார்வையிட வந்த தேர்வு மைய கண்காணிப்பாளர், ‘ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக்கூடாது’ என ஷபானாவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷபானா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருப்பினும் அனுமதிக்காததால், தேர்வு அறையில் இருந்து அவர் வெளியேறினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேர்வு மையத்துக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஷபானா தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுத்து மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து தேர்வு எழுத விரும்பவில்லை எனவும், இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள இருப்பதாகவும் எழுதி கொடுத்துவிட்டு ஷபானா தேர்வு மையத்தில் இருந்து சென்றார்.

The post ஹிஜாப் அணிந்து வந்த ஆசிரியைக்கு இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Dakshina Bharat ,Prasara Sabha ,Union Government ,
× RELATED திருவண்ணாமலை மகிளா கோர்ட் பரபரப்பு...