×

வேலூர் அரசு மருத்துவமனையில் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து ஆண் குழந்தை கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்பு

வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாளேயான பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்டது. 8 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டு, காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். 2வது கணவனுக்காக கர்ப்பிணி நாடகமாடி குழந்தையை கடத்தியதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர்(40), கூலி தொழிலாளி. இவரது மனைவி சூரியகலா(37). தம்பதிக்கு கடந்த 17ம் தேதி கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்தடை சிகிச்சைக்காக சூரியகலா, குழந்தையுடன் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் பிரசவ வார்டில் வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், சூரியகலாவிற்கு உணவு கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயக்கம் அடைந்தார். அப்போது, அந்த பெண், குழந்தையை தூக்கி சென்றுள்ளார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது, குழந்தை இல்லாததை கண்டு சூரியகலா அதிர்ச்சியடைந்தார். புகாரின்பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள போலீசார் ஒன்றிணைந்து 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில், குழந்தையை ஒரு பெண் காஞ்சிபுரத்திற்கு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் குழந்தையுடன் இருந்த ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மாவை (30)போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண்ணுக்கு 2010ல் திருமணம் நடந்துள்ளது. ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். பின்னர் ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால் கணவர், குழந்தைகளை பிரிந்து, அவருடன் வாழ்ந்துள்ளார். அவருக்கு குழந்தை இல்லாததால் முதல் கணவரின் குழந்தைகளை வளர்க்கலாம் என கூறியதை ராஜா ஏற்கவில்லை.

இதனால் கர்ப்பமாக இருப்பதாக கூறி நாடகமாடியுள்ளார். வேலூர் மருத்துவமனையில் ஆண் குழந்தையை கடத்திவிட்டு தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக அவரிடம் கூறியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர். 8 மணிநேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட எஸ்பி கிரண்ஸ்ருதி(பொறுப்பு) கூறுகையில், இந்த சம்பவத்தில் அவரது 2வது கணவர் ராஜாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என அறிய அவரை பிடித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

The post வேலூர் அரசு மருத்துவமனையில் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து ஆண் குழந்தை கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore government hospital ,
× RELATED சிறுபாசன ஏரிகளுக்கு நீர் செல்ல...