×

ஃபிபா மகளிர் கால்பந்து ஸ்பெயின் உலக சாம்பியன்

சிட்னி: ஃபிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ‘ஸ்டேடியம் ஆஸ்திரேலியா’ அரங்கில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், இங்கிலாந்து – ஸ்பெயின் அணிகள் மோதின. 29வது நிமிடத்தில் ஸ்பெயின் கேப்டன் ஓல்கா கர்மோனா அபாரமாக கோல் அடித்து அந்த அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. 2வது பாதியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.

விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று உலக கோப்பையை முத்தமிட்டது. இங்கிலாந்து அணி 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது. ஒரே சமயத்தில் ஃபிபா யு-17, யு-19 மற்றும் சீனியர் மகளிர் உலக கோப்பை என 3 தொடர்களிலும் சாம்பியன் பட்டத்தை வகிக்கும் முதல் அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் அணி வசப்படுத்தி உள்ளது.

* ஸ்பெயினின் அய்டனா பான்மேடி தொடரின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு தங்கப் பந்து விருது பெற்றார் (3 கோல், 2 அசிஸ்ட்).

* ஜப்பான் காலிறுதியுடன் வெளியேறினாலும், அதிக கோல் அடித்த வீராங்கனைக்கான தங்க காலணி விருதை அந்த அணியின் ஹினடா மியாஸவா தட்டிச் சென்றார் (5 கோல்).

* சிறந்த கோல் கீப்பருக்கான தங்கக் கையுறை விருது இங்கிலாந்தின் மேரி இயர்ப்ஸுக்கு வழங்கப்பட்டது.

* சிறந்த இளம் வீராங்கனை விருதை ஸ்பெயினின் சல்மா பராலுயலோ கைப்பற்றினார்.

The post ஃபிபா மகளிர் கால்பந்து ஸ்பெயின் உலக சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Spain ,FIFA Women's Soccer World Champion ,Sydney ,FIFA Women's World Cup ,Stadium Australia ,FIFA ,Football ,Dinakaran ,
× RELATED ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்வு