×

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ஸ்பெயின் சாதனை

சிட்னி: மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல்முறையாக சாம்பியன் வென்று ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளும் முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த 2 அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி சிட்னியில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இன்று பிற்பகல் தொடங்கியது.

போட்டித் தொடங்கிய 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கார்மோனா கோல் அடிக்க 1-0 என ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியும் கோல் அடிக்க கடுமையாக போராடியது. ஸ்பெயின் அணியின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வர தீவிரமாக முயற்சித்தனர். ஆனாலும் ஸ்பெயின் அணியின் தற்காப்பை மீறி இங்கிலாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்காததால் இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

The post மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ஸ்பெயின் சாதனை appeared first on Dinakaran.

Tags : Spain ,Women's World Cup ,Sydney ,England ,Women's World Cup football ,Dinakaran ,
× RELATED ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்வு