×

‘மருத்துவக் கல்லூரி மாணவர்’ பால் வண்டியில் பைக் மோதி ஏடிஜிபி அண்ணன் மகன் பலி

சேலம்: சேலத்தில் பால் வண்டியில் பைக் மோதி தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியின் அண்ணன் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண். இவரது சொந்த அண்ணன் குமார். எல்ஐசி அதிகாரியான இவர், சேலம் சின்னதிருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் தீபன்கர் (23), சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 4ம் ஆண்டு படித்து வந்தார். தீபன்கரின் நண்பரின் தங்கை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு இரும்பாலை அருகேயுள்ள சித்தனூரில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தனது பைக்கில் தீபன்கர் சென்றார். அங்கு இரவு 10.30 மணியளவில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சின்னதிருப்பதியில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். சூரமங்கலம் புதுரோட்டை கடந்து ரெட்டிப்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்கினார். அப்போது முன்னால் பால் வண்டி சென்று கொண்டிருந்தது. வேகமாக வந்த தீபன்கர், அந்த பால் வண்டியில் மோதினார். இதில், தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயமடைந்தார். அவ்வழியே வந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே தீபன்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று, தீபன்கரின் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பால் வண்டியை ஓட்டி வந்த சுபாஷ் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அண்ணன் மகன் இறந்த தகவலையறிந்து இன்று காலை, கூடுதல் டிஜிபி அருண் சேலம் வந்தார். அவர், சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்த தீபன்கரின் உடலை பார்த்தார். பின்னர், பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

The post ‘மருத்துவக் கல்லூரி மாணவர்’ பால் வண்டியில் பைக் மோதி ஏடிஜிபி அண்ணன் மகன் பலி appeared first on Dinakaran.

Tags : ADGP ,Salem ,Tamil Nadu ,DGP ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...