×

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் காவல் நிலையத்தில் 3 பேர் சரண்: போலீசார் விசாரணை

சென்னை, ஆக.20: பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் 3 பேர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ஆற்காடு அருகே உள்ள புண்ணை கிராமத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ் (எ) ஆற்காடு சுரேஷ் (42). இவர், புளியந்தோப்பு நரசிம்ம நகரில் வசித்து வந்தார். இவர் மீது, காஞ்சி சங்கரராமன், ரவுடி ராதாகிருஷ்ணன், சின்னா மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி, ஆள்கடத்தல் என 30க்கும் மேற்ப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 8 முறை போலீசார் குண்டர் சட்டத்தில் ஆற்காடு சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நேற்றுமுன் தினம் ஒரு வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷ், தனது வழக்கறிஞருடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, மாலையில் தனது நண்பர் மாதவனுடன் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீனவ உணவகத்திற்கு சாப்பிட வந்தார். அங்கு, மணல்பரப்பில் அமர்ந்து ஆற்காடு சுரேஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, காரில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல், ஆற்காடு சுரேஷை சுற்றிவளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. தடுத்த நண்பர் மாதவனையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு காரில் தப்பியது. இதில் படுகாயமடைந்த ஆற்காடு சுரேஷை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த மாதவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிவில் சப்ளை கம்பெனியில் கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது, மற்றொரு கடத்தல் கும்பலுக்கும், ஆற்காடு சுரேசுக்கும் ஏற்பட்ட தகராறில் முதல்முறையாக புழல் சிறைக்கு சென்றுள்ளார். அங்கிருந்தபோது, ரவுடி சின்னா என்ற சின்னாகேசவலு என்பவருடன் கூட்டு சேர்ந்து கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஆற்காடு சுரேஷ் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் ஆற்காடு சுரேஷ், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் தாதா அஞ்சலையுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை, அடிதடி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சின்னாவுடன் மோதல் ஏற்பட்டு, அவரை விட்டு பிரிந்தார்.

கடந்த 2009ம் ஆண்டு ஆற்காடு சுரேஷ், தனது கூட்டாளிகளுடன் பூந்தமல்லி நீதிமன்ற வாசலில் சின்னா மற்றும் அவரது வழக்கறிஞர் பகத்சிங்கை கொலை செய்து பெரிய தாதாவாக உருவெடுத்தார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலு, ரவுடி பாம் சரவணனின் தம்பி தென்னரசுவை கொலை செய்ததால், பாம் சரவணனுக்கும், ஆற்காடு சுரேசுக்கும் பகை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இறந்த சின்னாவின் கூட்டாளியான ராதா என்பவரை கடந்த 2019ம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றுள்ளார். 2021ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் புளியந்தோப்பு ஆடுதொட்டியில் தனிப்படை போலீசார் ஆற்காடு சுரேஷை துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த ஆற்காடு சுரேஷ் பெரிய அளவில் குற்றங்களில் நேரடியாக ஈடுபடாமல் தலைமறைவாகவே இருந்து கொண்டு, கூலிப்படையினரை வைத்து குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ராதா கொலை வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷ் ஆஜராகிவிட்டு, தனது நண்பரான வழக்கறிஞர் மது என்பவருடன் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள உணவகத்திற்கு வந்து சாப்பிட்டபோது, அவரை 6 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் ரவுடிகளான சைதாப்பேட்டையை சேர்ந்த சந்துரு, அரக்கோணத்தை சேர்ந்த ஜெயபால், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த யமஹா மணி ஆகியோர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வழக்கறிஞர் மண்ணடி ஆறுமுகம் மற்றும் வேந்தகுமார் ஆகியோர் மூலம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் காவல் நிலையத்தில் 3 பேர் சரண்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Arhat rowdy Suresh ,Chennai ,Mylapore police ,station ,Arkadu Suresh ,Arcot… ,Arcot Suresh ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...