×

ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ₹5 கோடி அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

பூந்தமல்லி, ஆக.20: திருவேற்காடு பகுதியில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ₹5 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தரசோழபுரம் தாழங்குளம் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நிலம் தேர்வு செய்தபோது, தாழங்குளம் பகுதியில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது வருவாய் துறை மூலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பை காலி செய்யும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர் இடத்தை காலி செய்யவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம், திருவேற்காடு போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா தலைமையில், பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி முன்னிலையில், வருவாய் துறையினர், நகராட்சி அதிகாரிகள் உட்பட 75 பேர் கொண்ட குழுவினர் 3 பொக்லைன் இயந்திரங்களுடன் தாழங்குளம் பகுதிக்கு சென்று, 11 ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர்.
மேலும் 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலமும் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ₹5 கோடி என கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வகையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ₹5 கோடி அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Tiruvetadam ,Thiruvedu ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை