×

அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கு நவீன சிகிச்சை

சேலம், ஆக.20: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கு நவீனமுறையில் சிகிச்சை அளிப்பதற்கு ₹24கோடி மதிப்பிலான லீனியர் ஆக்சிலேட்டர் கருவி விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் மருத்துவம், அறுவை சிசிச்சை, குழந்தை மருத்துவம், கண், பல், எலும்பியல், மயக்க மருந்து, மனநல மருத்துவம், கதிரியக்க நோயறிதல், அவசர சிகிச்சை, நீரிழிவு நோய், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, நாளமில்லா அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், இதயவியல், குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல் துறை, பொதுமருத்துவம், கதிர்வீச்சு புற்றுநோயியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த ெபாதுமக்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் செயல்படும் புற்றுநோய் துறையில் கோபால்ட் சிகிச்சை மூலமாக எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோபால்ட் சிகிச்சைக்கு தினமும் 55முதல்60 நோயாளிகள் வருகின்றனர். ஹீமோதெரபி சிகிச்சைக்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 450முதல் 500 பேர் வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை சிகிச்சை அளிக்கும் வகையில் ₹24கோடி மதிப்பில் ஆக்சிலேட்டர் சிகிச்சை வசதி அமைக்கப்படுகிறது.

இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கு ஹீமோதெரபி, ரேடியோ தெரபி, அறுவை சிகிச்சை என மூன்று விதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் புற்றுநோய்க்கான நேரியல் முடுக்கி (லினாக் மெசின்) சிகிச்சையானது விரைவில் துவங்க உள்ளது. இதன் கட்டுமான பணிகள் பெருமளவில் நிறைவடைந்து விட்டது. இதில் பிரதான கருவியின் மதிப்பு மட்டும் ₹18 கோடியாகும். அதனுடன் இணைந்த உள்கதிர்வீச்சு சிகிச்சை கருவி ₹4 கோடி, சிடி சிமிலேட்டடு கருவி ₹2கோடி என்று மொத்தம் ₹24கோடியில் லீனியர் ஆக்சிலேட்டர் சிகிச்சைக்கான கருவி பொருத்தப்படுகிறது. தற்போதுள்ள கோபால்ட் சிகிச்சையில் மூளையில் உள்ள கட்டி, கிட்னி, மூளை தண்டுவடத்தில் உள்ள கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. ஆனால் லீனியர் ஆக்சிலேட்டரால் சிகிச்சை அளிக்க முடியும்.

லீனியர் ஆக்சிலேட்டர் எனப்படும் லினாக் என்பது மின்சாரத்தில் இயங்கக்கூடியதாகும். நமது சேலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி உள்ளது. தற்போது லீனியர் ஆக்சிலேட்டர் சிகிச்சைக்கான கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. அறையின் உள்ளே மின்இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒவ்வொரு கருவியாக வருகிறது. அதை ஒவ்ெவான்றாக பொருத்தி வருகிறோம். பணிகள் முற்றிலும் நிறைவடைந்து விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.இதனால் புற்றுநோயாளிகளுக்கு பிற மருத்துவமனைகளுக்கு செல்லாமல் சேலம் அரசு மருத்துவமனையிலேயே தரமான சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.

புற்றுநோய்க்கு ட்ரூபீம் ரேடியோ தெரப்பி முறையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் ₹2.50 லட்சம் முதல் ₹3 லட்சம் வரை செலவாகும். இந்த சிகிச்சை முறையானது ஒரு மேம்படுத்தப்பட்ட மருத்துவ நேரியல் முடுக்கி ஆகும். தலை, கழுத்து, மூளை, மார்பகம், நுரையீரல், உணவுக்குழாய், கர்ப்பபை வாய் புற்றுநோய் உள்பட உடலில் எந்த இடத்திலும் மிகத்துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சையை அளிக்க முடியும். இந்த சிகிச்சை முறை செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் இங்கு வரும் நோயாளிகளை பிற மருத்துவமனைக்கு பரிந்துரைக்கத் தேவையில்லை. அதே போல் மேப் தெரபியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் ₹40 ஆயிரம் செலவாகும். மார்பக புற்று நோய் பாதிப்புகளுக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒரு வருடத்திற்கு 17 முறை ஊசி போடுகிறோம். இதனை அரசு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாகவே போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.

The post அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கு நவீன சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Government Medical College Hospital ,Government Hospital ,Dinakaran ,
× RELATED அன்னப்பிளவு குழந்தைகள் 26 பேருக்கு அறுவை சிகிச்சை