×

இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுக்கு காதல் வலைவீசி போதைப்பொருள் விற்பனை: ஆயுர்வேத தெரபிஸ்ட் கைது

திருவனந்தபுரம்: போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்காணிக்க கேரள கலால்துறையினர் இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலம் சாட்டிங் செய்து வருவது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் பெங்களூருவிலிருந்து கோட்டயத்திற்கு போதைப் பொருளுடன் வருவது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர் கோட்டயம் பெருவந்தானம் பகுதியைச் சேர்ந்த பிலிப் மைக்கேல் (24) என தெரியவந்தது.

அவரிடமிருந்து 3 கிராம் எம்டிஎம்ஏ மற்றும் 50 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பெங்களூருவிலிருந்து வரும் வழியில் அவர் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி உள்பட பல்வேறு பகுதிகளில் போதைப் பொருளை விற்பனை செய்துள்ளார். பெங்களூருவில் ஆயுர்வேத தெரபிஸ்டாக பணிபுரிந்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி அவர்களை போதைக்கு அடிமையாக்கி வந்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இவர் பெருமளவு போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். விசாரணைக்குப் பின் கலால் துறையினர் அவரை கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுக்கு காதல் வலைவீசி போதைப்பொருள் விற்பனை: ஆயுர்வேத தெரபிஸ்ட் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala Excise Department ,Instagram ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!