×

கிலியில் இருக்கும் குமரியின் மாவட்ட இலை கட்சி பொறுப்பாளர்களின் நிலை பற்றி விளக்குகிறார்: wiki யானந்தா

‘‘நெ ற்களஞ்சிய மாவட்டத்துல இலை கட்சியின் முக்கிய பொறுப்பை யார் பிடிக்க போறா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் இலை கட்சியில சேலத்துக்காரர் அணியில் உள்ளவர்கள் இடையே மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க கடும் போட்டா போட்டி நடக்குதாம். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் மூவ் செய்து வர்றாங்களாம். இதற்காக ‘ப’ விட்டமினை அதிகளவில் இறக்கி வர்றாங்களாம். பத்து ரூபாய் இறைத்தால் தான் கோடிக்கணக்கில் எலக்‌ஷன் டைம்ல சம்பாதிக்க முடியும், கட்சியில் பலரை மாவட்ட கிளை பொறுப்பில் நியமித்து கொடுத்த கரன்சியை வாங்கலாம்னு நினைக்கிறாங்க. அது மட்டுமில்லாமல் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் யார் கை ஓங்கப்போகிறது என்பதில் சேலத்துக்காரர் அணியினர் காத்திருக்கிறார்களாம். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க நான்கு பேர் களத்தில் இருக்காங்க. ஆனால், சேலத்துக்காரர் பிடி கொடுக்கலையாம். போட்டியில் இருக்குற நாலு பேரும், மேலிட நபர்கள் மூலமா ‘மூவ்’ செய்து கொண்டு இருக்கிறார்களாம். இதனால் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க கடும் போட்டியாம். இதில், இலை கட்சியின் மாஜி அமைச்சர் சைலண்டாக இருந்து உள்ளடிகளில் இறங்கியுள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல மர்மமான விஷயம் ஒன்று நடக்குதாமே, அது என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல வாசி ஒன்றியம்னு ஒன்று இருக்குது. இந்த ஒன்றியத்துல இன்ஜினியராக பிளவரை பெயரில் கொண்டவர் இருக்காரு. ஒன்றிய ஆபிஸ் புதுசா கட்டுறதுக்கு 3 வருஷத்துக்கு முன்னாடி, ஒப்பந்தம் கேட்டாங்க. இலை கட்சியை சேர்ந்த ஒப்பந்தக்காரரு, மூன்றரை கோடி மதிப்பிலான பணியை எடுத்திருக்காரு. ஆனா, இவர் இந்த பணியை, வாசி ஏரியாவைச் சேர்ந்த வெளிச்சமான ஊர் ஆட்சியில இருக்குற ஒருத்தர்கிட்ட கொடுத்திருக்காரு. இவரு ஒப்பந்தபணியை சரிவர செய்யலையாம். ஹயர் ஆபிசர் அழுத்தத்தால ஒப்பந்தப்பணி முடிச்சதாக ஏதோ கணக்கு காட்டிட்டாங்க. இப்ப எல்லாமே ஆன்லைன் ஆகிடுச்சே, இதனால செஞ்ச பணிக்கான போட்டோவை அப்டேட் செய்யச்சொல்லி கேட்குறாங்க. இதைகேள்விப்பட்ட இன்ஜினியருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சாம். 3 அடைப்பு இருக்குதாம். ஆபரேஷனும் நடத்துடுச்சாம். இதனால ஒப்பந்த பணியில கைவெச்சவங்க இப்ப கதிகலங்கி போயிருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூங்கா நகரத்துல இலை கட்சி மாநாடு நிலை என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியின் சேலம்காரர் அணி நடத்துகின்ற மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தேனிகாரர் அணியில் இருந்து நீக்கப்பட்டவங்க நிறைய பேர் சேர்றாங்களாம். அண்மையில் தேனிகாரரால் நீக்கப்பட்ட குமரியை சேர்ந்த மன்னர் பெயரை கொண்டவரும், நாஞ்சில் பெயரை கொண்டவரும் இணைய உள்ளார்களாம். இதன் வாயிலாக தேனிகாரருக்கு குமரி மாவட்டத்தில் இருந்த ஓரளவு செல்வாக்கும், இதனால் காணாமல் போயுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்த இணைப்பு இலை கட்சியில் இருக்கின்ற மற்றவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாம். அடுத்து மாவட்ட செயலாளர் ரேஸில் எங்கே இவர்களும் வந்துவிடுவார்களோ என்ற அச்சம்தான் அதற்கு காரணமாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எந்த மாவட்டத்தில் கல்லூரி மாணவர் விடுதிக்கு பெண் ஆசிரியையை காப்பாளராக நியமித்து இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் 51 பள்ளி, கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகிறதாம். இதில் வனம் என்று முடியும் பகுதியில் 2 கல்லூரிகள் உள்ளதாம். விடுதி பணிக்கு சென்றால் நல்ல வசூல், ஓய்வுகிடைக்கும் என்பதால் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் பலர் விடுதி காப்பாளர் பணிக்கு செல்ல போட்டா போட்டிதானாம். அப்படிதான் வனம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு 8ம் வகுப்பிற்குகீழ் பாடம் எடுக்கும் இடைநிலை பெண் ஆசிரியரை காப்பாளராக நியமித்திருக்கிறார்களாம். அந்த பகுதியில் ஆதிதிராவிடர் நல தாசில்தாராக இருந்த ஈஸ்வரன் பெயரைக் கொண்டவர், லம்பாக ஒரு கரன்சியை வாரி எடுத்து கொண்டு கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு காப்பாளராக நியமித்துவிட்டு, துணைஆட்சியர் பதவி உயர்வில் சென்றுவிட்டாராம். கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் விடுதிக்கு, பெண் இடைநிலை ஆசிரியர் எப்படி உள்ளே சென்று நிர்வாகம் செய்வார்… அதுவும் பள்ளி விடுதிகள் என்றால்கூட பரவாயில்லை, கல்லூரி விடுதிக்கு குறைந்தபட்சம் பட்டதாரி ஆசிரியர் நிலையில்தான் நியமிக்க வேண்டுமாம். இடைநிலை ஆசிரியரை அங்கு நியமித்தது பெரும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post கிலியில் இருக்கும் குமரியின் மாவட்ட இலை கட்சி பொறுப்பாளர்களின் நிலை பற்றி விளக்குகிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Kumari ,Gili ,Leaf Party ,Ne Rakkalanjiya ,Uncle ,Peter ,Nelakalanjiyam ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...