×

ராமேஸ்வரம்-தலைமன்னார் படகு போக்குவரத்து கடலூரில் பசுமை வள துறைமுக வளாகம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: கடலூர் மாவட்டத்தில் பெரும் திறன் கொண்ட ‘பசுமைவள துறைமுக வளாகம்’ உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், கெவடியாவில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் 19வது கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் சார்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நடராஜன், மற்றும் மாநில துறைமுக அதிகாரி அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாடு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலா திட்டத்தின்கீழ், மானியமாக தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்த ஒன்றிய அமைச்சர் மற்றும் இந்திய அரசுக்கு நன்றி. மேலும், இந்தியாவை சர்வதேச அளவில் இணைக்கும் வகையில் இலங்கைக்கு தொடங்கவுள்ள முதன்மையான படகுச் சேவைக்கு வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இப்படகு சேவையை துரிதமாக தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 1980 வரை செயல்பாட்டில் இருந்த இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும். அதேபோல, கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். அதன் நீண்ட கடற்ரையை பயன்படுத்தி கடலோர சுற்றுலா, பொழுதுபோக்கு கடல்நீர் விளையாட்டுகளை வழங்குவதன் மூலம் நீல பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக்கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும்திறன் கொண்ட பசுமை வளத்துறைமுகத்தை உருவாக்கவும், தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், ஆண்டோன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை இத்துறைமுகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பேசினார்.

The post ராமேஸ்வரம்-தலைமன்னார் படகு போக்குவரத்து கடலூரில் பசுமை வள துறைமுக வளாகம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Talaimannar Boat Transport Green Resource Port Complex ,Cuddalore ,Minister ,AV ,Velu ,Chennai ,Tamil Nadu government ,Cuddalore district ,
× RELATED ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்!