×

முற்றுப்புள்ளி வைக்க…

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுதேர்வு (நீட்) எழுதி வெற்றி பெறவேண்டியது கட்டாயம் என்பதை 2017ம் ஆண்டு அமல்படுத்தியது ஒன்றியஅரசு. ஒன்றிய கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்படும் இந்த தேர்வு மாநில வாரியங்களை சார்ந்து படிக்கும் மாணவர்களின் நலனுக்கு எதிரானது. இது கற்றலுக்கு பதிலாக ஒரு பயிற்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். குறிப்பாக ஏழை, எளிய, பின்தங்கிய குடும்பங்களில் பிறந்த மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு சிதைத்துவிடும். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பிரசித்தி பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவனும், கடைகோடி மாநிலமான குமரியின் குக்கிராம பள்ளியில் படிக்கும் மாணவனும் ஒரே ரீதியிலான ேதர்வை எதிர்கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெறுபவரே மருத்துவராக முடியும் என்பது ஏற்புடையதல்ல. எனவே நீட் தேர்வில் மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது மிகவும் அவசியம் என்று ஆகச்சிறந்த கல்வியாளர்கள் அனைவரும் வலியுறுத்தினர். நீட் தேர்வு ஏழை மாணவச்செல்வங்களின் மருத்துவர் கனவை சிதைப்பதோடு, சமூகநீதி தத்துவத்திற்கு உலை வைக்கும் என்று திமுக பெருங்குரல் எழுப்பியது.

சமூக மேம்பாட்டில் ஆர்வம் கொண்ட பிரதான அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தன. நீட் தேர்வு ெதாடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகள் ஒன்றிய அரசை அதிர வைத்தது. மாநிலம் முழுவதும் நடந்த மாபெரும் போராட்டங்களும் எளிய குடும்பத்து குழந்தைகளின் உள்ளக்குமுறலை எடுத்துச் ெசான்னது. இது ஒருபுறமிருக்க, பன்னிரெண்டு ஆண்டுகளாக பெற்றோரும், உற்றாரும் ஊட்டி வளர்த்த மருத்துவர் கனவு, ஒரே தேர்வால் சிதைந்து போனதில் மனமுடைந்த மாணவச் செல்வங்கள் ஏராளம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் மாண்டுபோன தளிர்களின் எண்ணிக்ைக மிக அதிகம். இந்நிலையில் 2021ம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், எளிய குடும்பத்து குழந்தைகளின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார். தமிழ்நிலத்தில் மருத்துவ ேசர்க்கையில் நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். இந்த குழுவின் 165 பக்க அறிக்கை, நீட் தேர்வின் பாதகங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் முதல்வர்.

இந்த தீர்மானம் ஒன்றிய அரசின் பிரதிநிதியான ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தினார் ஆளுநர். பெரும் போராட்டத்திற்கு பிறகு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு, நீட் தேர்வு தந்த விரக்தியால் மாணவன் மட்டுமன்றி, அவரது தந்தையும் தன்னுயிரை மாய்த்துக் கொண்டது ேவதனையின் உச்சமானது. ஒன்றிய அரசும், ஆளுநரும் காட்டிய அலட்சியம் 28 நம்பிக்கை நட்சத்திரங்களை நம்மிடமிருந்து பிரித்துள்ளது. எனவே இனியும் அபத்தங்கள் நேராமல் தடுக்க, நீட் தேர்வை தவிர்க்க ேவண்டும் என்பதை மீண்டும் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது தமிழ்நிலம். இதை வலியுறுத்தி இன்று (20ம்தேதி) உண்ணாவிரத அறவழிப் போராட்டத்தை அறிவித்துள்ளது திமுகழகம். இந்த அறவழிப்போராட்டம் அரக்க மனங்களில் இரக்கத்தை ஊற்றி, நீட் என்னும் கிருமியை துடைத்தெறிய வேண்டும். இதுவே தொடரும் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

The post முற்றுப்புள்ளி வைக்க… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...