×

மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை உலா

மேட்டுப்பாளையம்: இரண்டு மாதங்களுக்கு பின்னர் வழித்தடத்தை மறக்காமல் சமயபுரம் பகுதியில் பாகுபலி யானை சாவகாசமாக உலா வந்தது. கோவை மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெல்லித்துறை, ஓடந்துறை, சமயபுரம், வெல்ஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாகுபலி யானை வாயில் காயத்துடன் சுற்றி திரிவதாக வந்த தகவலை அடுத்து கும்கி யானைகளை கொண்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

மேலும், முதுமலை முகாமில் இருந்து இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. சுமார் 3 நாட்களாக வனத்துறையினர் கண்களில் சிக்காமல் போக்கு காட்டி வந்த பாகுபலி யானையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.ஒரு கட்டத்தில் பாகுபலி யானையின் வாயில் ஏற்பட்ட காயம் தானாகவே குணமடைந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் யானை குணமடைந்து விட்டதாகவும், யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அறிக்கை வெளியிட்டனர். இதனையடுத்து கும்கி யானைகளும், மருத்துவ குழுவினரும் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்த பாகுபலி யானை இன்று காலை மீண்டும் சமயபுரம் பகுதியில் ஊருக்குள் சாவகாசமாக உலா வந்தது.
2 மாதங்கள் ஆகியும் தனது வழித்தடத்தை மறக்காமல் மீண்டும் அதே பாதையில் சமயபுரம் வழியாக மேட்டுப்பாளையம்- வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையை கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

The post மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை உலா appeared first on Dinakaran.

Tags : Bakubali ,Mattupalaya ,Madtupalayam ,Bhagubali ,Samayapuram ,Govai Mattupalaam ,Pagubaly ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் இன்று காலை...