×

பொள்ளாச்சி அருகே நள்ளிரவு வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறித்து தப்பியபோது கிணற்றில் விழுந்த கொள்ளையர்கள்: 2 பேர் சிக்கினர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நள்ளிரவு வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறித்து தப்பியபோது கிணற்றில் விழுந்த 3 கொள்ளையர்களில் 2 பேர் போலீசில் சிக்கினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டிற்குள் நேற்று நள்ளிரவில் 3 மர்மநபர்கள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த மகாலட்சுமி என்பவரது கழுத்தில் கிடந்த செயினை பறித்து கொண்டு, அருகே உள்ள மற்றொரு தோட்டத்துக்கு சென்றனர்.

அங்கு வீட்டில் இருந்த மூதாட்டி வள்ளியம்மாள் என்பவர் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர். உடன் சுதாரித்து கொண்ட அந்த மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். இதைகேட்ட அவரது வீட்டின் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்த அவர்கள், மர்ம நபர்களை துரத்தினர். ஒருகட்டத்தில் 3 பேரையும், அப்பகுதியினர் பிடிக்க முயன்றனர். அப்போது, அந்த 3 பேரும் வேகமாக ஓடி தோட்டத்திலிருந்து வெளியே செல்ல முயன்றனர். இருட்டில் ஓடும்போது, அங்கிருந்த சுமார் 60அடி ஆளமுள்ள தோட்டத்து கிணற்றில் 3 பேரும் விழுந்தனர். இதில் இரு நபர்கள் கிணற்றிலிருந்து வெளியே வரும்போது, அவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர்.

ஆனால் அந்த இருவரும், பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பியோடினர். இதையடுத்து கிணற்றில் விழுந்த நபரை பிடிப்பதற்காக, பொது மக்கள் மேற்கு ஸ்டேஷன் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின் கிணற்றிற்குள் தத்தளித்து கொண்டிருந்த நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக, தீயணைப்பு வீரர்கள் சின்னப்பராஜ், சவுந்தர்யன் ஆகியோர் கிணற்றிற்குள் கயிறுக்கட்டி இறங்கினர். இரவு நேரம் என்பதால், கிணற்றில் விழுந்த நபரை மீட்க தீயணைப்பு நிலைய வீரர்கள் சற்று சிரமப்பட்டனர்.
இருப்பினும் சுமார் 2 மணி நேரம் போராடி அந்த நபரை கயிறுக்கட்டி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின், மேற்கு ஸ்டேஷன் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கம்பத்தை சேர்ந்த ரமேஷ் என்ற அருண்முத்து (30) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வந்தனர். இதில், ஒரு ஆசாமி குஞ்சிபாளையம் அருகே நடந்து சென்று கொண்டிருப்பதை போலீசார் அறிந்தனர். போலீஸ் வாகனத்தை கண்டதும் அந்த நபர் ஓடி உள்ளார். போலீசார் அந்த நபரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர். விசாரணையில் கம்பத்தை சேர்ந்த ஹரிதாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு நபரான கம்பத்தை சேர்ந்த சங்கர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரிவாள், கத்தி, கம்பு பறிமுதல்: பொள்ளாச்சி அருகே உள்ள தோட்டத்து சாலைகளில் கொள்ளையடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி விடலாம் என்ற நோக்கத்தில் நேற்று, மூவரும் கம்பத்திலிருந்து பொள்ளாச்சி வந்துள்ளனர். பின், குஞ்சிபாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்த அரிவாள், கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கொண்டு வீடுபுகுந்து கொள்ளையடிப்பதற்கு தயாராக சென்றுள்ளனர். திருட்டு முயற்சியில், பொதுமக்கள் பிடிக்க வருவதை அறிந்த அவர்கள் ஆயுதங்களை கிணற்றின் அருகே வீசிவிட்டு தப்பியோட முயன்றனர். போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

The post பொள்ளாச்சி அருகே நள்ளிரவு வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறித்து தப்பியபோது கிணற்றில் விழுந்த கொள்ளையர்கள்: 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...