×

9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவு தேர்வு பயிற்சி அளிப்பது ஏன்?: மாணவர்களின் தற்கொலை குறித்து ராஜஸ்தான் முதல்வர் கேள்வி

ஜெய்ப்பூர்: மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவு தேர்வு பயிற்சி அளிப்பது ஏன்? என்று, ராஜஸ்தான் முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் செயல்படும் நீட், ஜேஇஇ நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் நாடு தழுவிய அளவில் பிரபலமானவை. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், கோட்டாவில் தங்கி நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி பெறுகின்றனர்.

நுழைவு தேர்வில் வெற்றிப் பெறுவதற்காக பலமணிநேரம் தொடர்ந்து படித்தல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அடிக்கடி நடக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் கோட்டா மாவட்டத்தில் நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்ற 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

குறிப்பாக கடந்த 18 நாட்களில் 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்தனர். நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலைக்கு மன அழுத்தமே பிரதான காரணமாக கூறப்படும் நிலையில், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் விடுதிகளின் மின் விசிறிகளில் ‘ஸ்ப்ரிங்’ பொருத்தப்படுவது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில் கோட்டா நுழைவு தேர்வு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களில் சிலர் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்க, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து அசோக் கெலாட் கூறுகையில், ‘நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பெற்றோர்கள், மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

அவர்கள் மாணவர்கள் தற்கொலைக்கான காரணம், அதனை தடுப்பதற்கான ஆய்வறிக்ைகயை அடுத்த 15 நாட்களில் சமர்பிப்பர். 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்களில் சேர்ப்பதால், அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. போலி பயிற்சி மையங்களிலும் சேர்ந்து மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் தங்களது பள்ளிகளுக்குச் செல்வதில்லை. அவர்களின் பாடங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். மாணவர்கள் இரட்டைச் சுமை சுமைக்கின்றனர். இளம் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டு மட்டும் கோட்டா பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 21 மாணவர்களில் 14 பேர் குறிப்பிட்ட கோச்சிங் நிறுவனத்தில் படித்தவர்கள் தான்.

இந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டும் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்? எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்தையும் குறிவைத்து பேசவில்லை. இருந்தாலும் அங்கு மட்டும் அதிக தற்கொலைகள் ஏன் நடந்துள்ளன என்பதை அறிய விரும்புகிறேன்’ என்றார். தொடர்ந்து மாநில கல்வித்துறை இணை அமைச்சர் ஜாஹிதா கான் கூறுகையில், ‘நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாறிவிட்டன. அவர்கள் அவ்வாறு செயல்படக் கூடாது. இந்த பிரச்னை ராஜஸ்தானில் மட்டுமில்லை, நாடு முழுவதுமே இப்பிரச்னை உள்ளது’ என்றார்.

13,000 மாணவர்கள் தற்கொலை: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகளின்படி, கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,834 பேர், மத்திய பிரதேசத்தில் 1,308 பேர், தமிழ்நாட்டில் 1,246 பேர், கர்நாடகாவில் 855 பேர், ஒடிசாவில் 834 பேர், ராஜஸ்தானில் 633 பேர் என்ற அடிப்படையில் மாணவர்களின் தற்கொலைகள் நடந்துள்ளன.

The post 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவு தேர்வு பயிற்சி அளிப்பது ஏன்?: மாணவர்களின் தற்கொலை குறித்து ராஜஸ்தான் முதல்வர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : NEET ,Rajasthan ,Chief Minister ,Jaipur ,JEE ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு