×

பணமோசடி வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்; இம்ரான் கானுக்கு சிறையில் விஷம்?: உள்துறை செயலாளருக்கு மனைவி பகீர் கடிதம்

இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விஷம் கொடுத்து கொல்ல வாய்ப்புள்ளதால், அவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி உள்துறை செயலருக்கு பகீர் கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து, இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. உடனடியாக கைது செய்யப்பட்ட இம்ரான்கான், அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத வண்ணம் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் பாகிஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இம்ரான்கானின் மனைவி பேகம் புஷ்ரா பீபி, உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், ‘அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது கணவரின் உயிருக்கு ஆபத்துள்ளது. சிறையில் அவருக்கு விஷம் கொடுக்க வாய்ப்புள்ளது. எவ்வித காரணமும் இல்லாமல், எனது கணவரை அட்டாக் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். சட்டப்படி, என் கணவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும்.

எனது கணவர் ஆக்ஸ்போர்டில் படித்த பட்டதாரி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதால் அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்துக்கு ஏற்ப சிறையில் பி-கிளாஸ் வசதிகள் வழங்கப்பட வேண்டும். அட்டாக் சிறையில் இதுபோன்ற வசதிகள் இல்லாததால், அடியாலா சிறைக்கு அவரை மாற்ற வேண்டும். நாட்டின் முன்னாள் பிரதமர் என்பதால், அவருக்கு வீட்டில் சமைக்கும் உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டும். சிறை விதிகளின்படி எனது கணவருக்கு தனியார் மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனை செய்ய உரிமை உள்ளது.

அவரை கொல்ல ஏற்கனவே இரண்டு முறை முயற்சிகள் நடந்தன. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இம்ரான் கானின் கட்சி நிர்வாகிகள் அளித்த பேட்டியில், ‘எங்களது தலைவருக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்படலாம். அவருக்கு வீட்டில் சமைத்த உணவு மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர்.

The post பணமோசடி வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்; இம்ரான் கானுக்கு சிறையில் விஷம்?: உள்துறை செயலாளருக்கு மனைவி பகீர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Former Prime Minister of Pakistan ,Imran Khan ,Baqir ,Home Secretary ,Islamabad ,Former ,Prime Minister of Pakistan ,Dinakaran ,
× RELATED ராகுலை பிரதமராக்க பாக். துடிக்கிறது: பிரதமர் மோடி பிரசாரம்