×

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்: அமைச்சர் எ.வ. வேலு உரை

சண்டிகர்: கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார். 19வது கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் இன்று (19.08.2023) காலை 10.00 மணிக்கு குஜராத் மாநிலம், கெவடியாவில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்குபெற்றனர்.

தமிழ்நாட்டின் சார்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கு பெற்று உரையாற்றினார்கள். துறைமுகங்களுக்கு, சாலை மற்றும் இரயில் இணைப்பு சாகர்மாலா திட்டத்தின் மூலம், நிதியுதவி NIP திட்டங்கள் செயல்படுத்துதல், தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம், இந்திய துறைமுகங்கள் சட்டவரைவு, மிதக்கும் தோணித்துறை, கடல் விமான செயல்பாடுகள் மற்றும், இந்திய கடலோர காவல்படை நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் போன்ற பொருள் தொடர்பாக, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விவாதங்களை தொடர்ந்து கடலோர மாநிலங்களின் அமைச்சர்கள் உரையாற்றினார்கள். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றும்போது,

தீபகற்ப இந்தியா, குறிப்பாக பண்டைய தமிழ்நாடு, தென்கிழக்கு ஆசியா, இலங்கை மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இணைப்பில், ஒரு முக்கிய மையமாக விளங்கியது. கொற்கை, குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், அழகன்குளம், தேவிப்பட்டினம், நாகப்பட்டினம், பூம்புகார், கடலூர், அரிக்கமேடு, மரக்காணம், மாமல்லபுரம், பழவேற்காடு போன்ற பழங்காலத் தமிழகக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகங்கள் மற்றும் கோரமண்டல கடற்கரையில் உள்ள பல துறைமுகங்கள், தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் கலாச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றிக்கொண்டிருந்தன.

வ.உ.சிதம்பரனார் 1906-இல், பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்துடன் போட்டியிட, சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவினார். கடல்சார் மற்றும் துறைமுகத் துறையில் முன்னோடியாக இருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடரவும். இந்தியாவை தற்சார்புடைய நாடாக மாற்றவும், தமிழ்நாடு சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்கள்.

தமிழ்நாடு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதில் ஒரு செயலூக்கமான மற்றும் தாராளமான அணுகுமுறையை கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலா திட்டத்தின்கீழ், மானியமாக தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கு சுமார் ரூ.120 கோடி நிதியுதவி அளித்த ஒன்றிய அமைச்சருக்கும் மற்றும் இந்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டு பேசினார்.

இந்தியாவை சர்வதேச அளவில் இணைக்கும் வகையில் இலங்கைக்கு துவங்கவுள்ள முதன்மையான படகுச் சேவைக்கு வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேச பயணிகள் படகு சேவையானது நீண்டகாலமாக பகிரப்பட்ட வரலாறு மற்றும் ஆழமான கலாச்சார உறவுகளைக் கொண்ட இவ்விரு நாடுகளுக்கும் பயனளிக்கும். இது நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத்தும்.

கூடிய விரைவில் பலன் கிடைக்கும் வகையில், இப்படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது. ராமமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப் பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1980 ஆம் ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருந்த இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒருங்கிணைந்த முடிவுகளுக்காக, ஆற்றல், தொழிற்துறை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட கடலின் பல பங்காளர்களை ஒன்றிணைக்கும் கடல் இடஞ்சார்ந்த திட்டமிடலில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். அதன் நீண்ட கடற்ரையை பயன்படுத்தி கடலோர சுற்றுலா, பொழுதுபோக்கு கடல்நீர் விளையாட்டுகளை வழங்குவதன் மூலம் நீல பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக்கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும்திறன் கொண்ட பசுமை வளத்துறைமுகத்தை உருவாக்கவும், தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது. ஆண்டோன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குகளை இத்துறைமுகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது என பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பாக, நெடுஞ்சாலைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இதமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை நிர்வாக அலுவலர் S.நடராஜன், மற்றும் மாநில துறைமுக அலுவலர் M.அன்பரசன் ஆகியோர் பங்குபெற்றனர்.

The post இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்: அமைச்சர் எ.வ. வேலு உரை appeared first on Dinakaran.

Tags : India ,Sri Lanka ,Minister A. ,. Velu ,Chandigarh ,Minister ,Public works, ,Highways ,Interfaces ,Coaster States Development Committee ,AICC Etb ,Velu ,Minister A. Etb. Velu ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...